ஆன்டிகுவா: தென் ஆப்ரிக்கா சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், டி20 போட்டியில், 46 வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டனாக புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) போட்டித் தொடரில், கயானா அமேஸான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக, தென் ஆப்ரிக்கா முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் (46) ஆடி வருகிறார். நேற்று நடந்த லீக் போட்டியில், ஆன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணியும், கயானா அமேஸான் வாரியர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய கயானா, 20 ஓவர்களில் 211 ரன் குவித்தது.
அதன் பின் களமிறங்கிய ஆன்டிகுவா அணி, தாஹிரின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. 15.2 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 83 ரன் வித்தியாசத்தில் கயானா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தாஹிர், 4 ஓவர் வீசி, 21 ரன் மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம், மிக அதிக வயதில் (46) 5 விக்கெட் வீழ்த்திய கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.