இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான்(71) மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் 2 ஊழல் வழக்குகளில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு கடந்த 31ம் தேதி 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம்ரான் மீது பாகிஸ்தான் பொறுப்பு கூறல் நீதிமன்றம் புதிய ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. அதன்படி, “அரசு கருவூலமான தோஷகானாவுக்கு சேர வேண்டிய 7 உயர் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், வைரம் மற்றும் தங்க நகைகள் உள்பட பல்வேறு பரிசு பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்து, சிலவற்றை விற்பனை செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


