வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் :அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி
வாஷிங்டன் : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டு இருப்பது இந்திய மருந்து நிறுவனங்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். அதே வேளையில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து நிறுவனங்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பால், இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமையலறை உபகரணங்கள், குளியலறை பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு விதமான இருக்கை உபகரணங்களுக்கு 30% வரி விதிக்கப்படும் கனரக ட்ரக்குகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என அடுக்கடுக்காக டொனால்டு ட்ரம்ப் இறக்குமதி வரி விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.