தாக்கம் தெளிப்பான் (Impact Sprinkler) என்பது நீர்ப்பாசன அமைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு வகை தெளிப்பான் ஆகும். இந்த தெளிப்பான் நீர்ப்பாசனம் என்பது பயிர்களுக்கு மழைபோன்ற நீர்ப்பாசனத்தை வழங்கும் ஒரு முறையாகும். இது நீரின் அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரு வட்ட இயக்கத்தில் சுழன்று நீரைத் தெளிக்கிறது. இது ‘இம்பாக்ட் ஸ்பிரிங்லர்’ அல்லது ‘இம்பல்ஸ் ஸ்பிரிங்லர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தெளிப்பான் தலை, சுழலும் தாங்கியின் மீது அமர்ந்திருக்கும். தெளிப்பான் வழியாக நீர் பாயும்போது, நீரின் சக்தியால் தெளிப்பான் தலை வட்ட இயக்கத்தில் சுழலும். இந்த சுழற்சி, நீரை ஒரு பெரிய பரப்பளவிற்குச் சீராகத் தெளிக்க உதவுகிறது. வயல் பயிர்கள், காய்கறிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய இது பயன்படுகிறது. அதேபோல பெரிய தோட்டப் பகுதிகள் மற்றும் புல்வெளிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய கையடக்கத் தாக்கத் தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் நீடித்த மற்றும் நேர்த்தியான நீர்ப்பாசனத்திற்காக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் சுழலும் செயல்பாடு, ஒரு தெளிப்பானே பெரிய பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்ய உதவுகிறது. நீரின் தெளிப்பு முறை, ஓட்ட விகிதம் மற்றும் நீரின் ஆரம் போன்றவற்றை நீரின் மூலத்தில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி சரிசெய்யலாம். மேலும், தெளிப்பான்கள் பல்வேறு வெளியேற்றத் திறன்களுடன் கிடைப்பதால், அவை கிட்டத்தட்ட அனைத்து நீர்ப்பாசன மண்ணுக்கும் ஏற்றதாக இருக்கும் (FAO 1988). இருப்பினும், தெளிப்பான் அமைப்புகள் வண்டல் அல்லது குப்பைகள் இருப்பதால் எளிதில் அடைக்கப்படலாம் மற்றும் பெரிய அமைப்புகள் அதிக மூலதனச் செலவுகளை ஏற்படுத்துகின்றன.
இம்பாக்ட் மற்றும் கியர்-டிரைவ் ஸ்பிரிங்க்லர்கள் புல்வெளிகள், தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் பயன்படுத்தப்படும் இரண்டு பொதுவான வகை ஸ்பிரிங்க்லர்கள் ஆகும். இம்பாக்ட் அல்லது கியர்-டிரைவ் ஸ்பிரிங்க்லர்கள் முழு அல்லது பகுதி வட்டப் பயன்பாட்டு வடிவங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஒவ்வொரு ஸ்பிரிங்க்லரும் ஒரு பெரிய பகுதியை (பொதுவாக 12 மீ தலைக்குத் தலை இடைவெளி) உள்ளடக்கியிருப்பதால், அவை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பெரிய புல்வெளி பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
