குவாத்தமாலா: அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குவாத்தமாலாவில் நடைபெற்ற பாரம்பரிய விழாவில் அவரது உருவ பொம்மைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக, ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி ‘பிசாசு எரிப்பு’ என்ற வினோதத் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்தத் திருவிழாவில், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் குப்பைகளைத் தெருவில் கொட்டி, தீய சக்திகளை விரட்டுவதற்காகப் பிசாசு உருவ பொம்மைகளை எரித்துத் தூய்மைப்படுத்துவார்கள்.
காலப்போக்கில், இந்தத் திருவிழா அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. கடந்த காலங்களிலும் இதுபோன்று சர்ச்சைக்குரிய அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகள் இங்கு எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாரம்பரிய பிசாசு பொம்மைகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவ பொம்மைகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது மற்றும் லத்தீன் அமெரிக்கர்களை நாடு கடத்துவது போன்ற டிரம்பின் கடுமையான நடவடிக்கைகளைக் கண்டித்தே இந்தச் சம்பவம் அரங்கேறியது. இதுகுறித்து விழாவில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், ‘அமெரிக்காவின் சர்வாதிகாரியாகச் செயல்படும் டிரம்பின் கொள்கைகளை எதிர்த்தே இந்தத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்தினோம்’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.


