Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியேற்ற அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக 200 பேர் கைது: வன்முறை வெடித்ததில் ஒருவர் பலி

கமரில்லோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 பண்ணைகளில் குடியேற்ற அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக புலம்பெயர் தொழிலாளர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் காயமடைந்தனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கார்பின்டேரியா மற்றும் கமரில்லோ ஆகிய பகுதிகளில் உள்ள 2 பண்ணைகளில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் (ஐசிஇ) கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தினர். இதில் ஆவணம் இல்லாமல் தங்கியிருப்பதாக 200 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள். இந்த தகவலால் பண்ணைகளுக்கு வெளியே கூடியிருந்த தொழிலாளர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைக்க போலீசார் முயன்றதில் வன்முறை வெடித்தது. அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குடியேற்ற அதிகாரிகள் மற்றும் போலீசாரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தின் போது 12 பேர் காயமடைந்ததாக வென்ச்சுரா கவுண்டி தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ டவுட் தெரிவித்தார். மெக்சிகோவைச் சேர்ந்த ஜெய்ம் அலனிஸ் என்பவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவர் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக மருத்துவமனைக்கு அழைத்து வந்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* நிறத்தை குறிவைத்து கைது நடவடிக்கையா?

கலிபோர்னியாவில் குடியேற்ற அதிகாரிகளின் கைது நடவடிக்கையில் வன்முறை வெடித்ததில், லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட கலிபோர்னியாவின் 7 மாகாணங்களிலும் குடியேற்ற சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை நிறுத்துமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் வாதாட வழக்கறிஞர்கள், பழுப்பு நிற தோல் உள்ளவர்கள் குறிவைத்து கைது செய்யப்படுவதாகவும், வாரண்ட் இல்லாமல் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை உதவி செயலாளர் டிரிசியா மெக்லாப்லின் மறுத்துள்ளார்.