*கலெக்டர் உத்தரவு
சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த முகாமிற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளிப்பார்கள். அதன்படி நேற்று கலெக்டர் சுமித்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், நில ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை, சுடுகாடுக்கு வழி, ரேஷன் கார்டு, இலவச வீட்டுமனை பட்டா, சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும், கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 357 பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், குறிப்பிட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு, பிற மனுக்களுக்கு ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதேபோல் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த மனுநீதினால் முகாமில் டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட ஏராளமான மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.