இமேஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடுப்பு எலும்புக் கிண்ண முறிவு ஏற்பட்ட பெண்ணுக்கு வெற்றிகரமான சிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல்
சென்னை: இடுப்பு எலும்புக் கிண்ண முறிவு ஏற்பட்ட 33 வயது பெண்ணுக்கு, மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது. எலும்பு முறிவியல் அறுவைசிகிச்சை நிபுணர் முதுநிலை நிபுணர் சிங்காரவடிவேலு தலைமையிலான குழுவினர், முன்புறத்திலிருந்து அணுகி இந்த எலும்பு முறிவை குறைத்து மற்றும் சரிசெய்வதன் வழியாக இந்த அறுவைசிகிச்சை செயல்முறையை மேற்கொண்டனர். முன்புற பகுதியில் திருகாணிகளை சரியாக பொருத்துவதற்கு O-ஆர்ம் இமேஜிங் சாதனை அமைப்பு வழிகாட்டியது.
இதன் மூலம் துல்லியத்தோடு எலும்பு முறிவை சரிசெய்யும் இப்பணியை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இந்த அணுகுமுறையானது, அறுவைசிகிச்சைக்கான காலஅளவையும், திசுவிற்கு ஏற்படும் காயத்தையும் மற்றும் கதிர்வீச்சுக்கு வெளிப்படும் இடர்வாய்ப்பையும் குறைத்து, நோயாளி வேகமாக உடல்நலம் தேறி மீள்வதற்கு ஆதரவளித்திருக்கிறது. O-ஆர்ம் சிஸ்டம் என்பது, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு செயல்முறைகளின் போது விரிவான, முப்பரிமாண (3D) படங்களையும் 360 டிகிரி நிகழ்நேர வழிகாட்டுதலையும் வழங்கும் ஒரு மேம்பட்ட அறுவை சிகிச்சை இமேஜிங் தளம் ஆகும்.
வழக்கமான C-ஆர்ம் தொழில்நுட்பம் சாதாரண எலும்பு முறிவுகளுக்குப் போதுமானதாக இருந்தாலும், அதன் இரு பரிமாண (2D) இமேஜிங், பல நேரங்களில் முழுமையான தகவல்களையோ அல்லது ஒரு முப்பரிமாண (3D) நோக்குநிலையையோ வழங்குவதில்லை. இந்தப் பகுதிகளில் திருகுகளை பொருத்துவதில் ஏற்படும் சிறிய பிழைகள் கூட நரம்புகள், ரத்த நாளங்கள் அல்லது முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தக்கூடும்.
எலும்பு அமைப்புகள் மற்றும் உள்வைப்பு பொருத்தப்பட்டுள்ள நிலை ஆகியவற்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதன் மூலம், இந்தச் சவால்களை அதிக துல்லியத்தோடும், பாதுகாப்போடும் சமாளித்து சிறப்பாக செயல்பட O-ஆர்ம் அமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவுகிறது.
