Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலுப்பூர் அருகே குளங்களில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும்

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

விராலிமலை : இலுப்பூர் அருகே குளங்களில் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்தி புவியியல் மற்றும் கனிம வளம் சுரங்க துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று குளங்கள் ஆழமாக வெட்டப்படுவதால் நீர் நிற்கும் போது விபத்து நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் இலுப்பூர் அடுத்து உள்ளது திருநல்லூர். தமிழகத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இவ்வூரில் நடைபெறும் என்பது இந்த ஊரின் தனிச்சிறப்பாகும். இந்த ஊர் மக்கள் பெரும் பகுதி குளத்து பாசன விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த மணிமுத்து என்பவர் திருநல்லூரில் உள்ள பெரிய குளம், உப்பங்குளம், இவ்வூர் வழியாக ஓடும் கோரையாறு உள்ளிட்ட குளங்கள், ஆற்றுப்படுகைகளில் அரசு அனுமதி பெறாமல் சரளை மண் மற்றும் ஆற்று மணலை இரவு நேரங்களில் ஜேசிபி எந்திரம் மூலம் அள்ளப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து குற்றம் சாட்டுகிறார்.

மேலும், குளங்களில் இயந்திரங்கள் மூலம் அதிக ஆழத்திற்கு வெட்டப்பட்டு மணல் அள்ளப்படுவதால் மழைக்காலங்களில் குளத்தில் தேங்கும் நீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகும் என்கின்றனர். அதாவது, ஆழமாக வெட்டப்படும் இடத்தில் மனிதர்கள் நின்று குளிக்கவோ கால்நடைகள் நீர் அருந்தவே முடியாது என்றும் ஆழமான பகுதியில் கிடக்கும் நீர் மேடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு நீர் பாயது என்றும் கூறுகின்றனர் தனியார் மற்றும் அரசாங்கம் இப்பகுதிகளில் மணல் அள்ளக்கூடாது என்று கடந்த காலங்களில் ஊர் கட்டுப்பாடு தீர்மானமும் நிறைவேற்றி உள்ளதாக அவ்வூரைச் சேர்ந்த ஜோதி கூறுகிறார்.

ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்ற அதிகாரத்தால் மணிமுத்து என்பவர் இது போன்ற அரசுக்கும், பொதுமக்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த நிலையை அரசு மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு குளங்களில் வெட்டப்பட்டுள்ள ஆழத்தின் அளவை கணக்கீடு செய்து அதற்கு உரிய முறையில் அபராதம் விதித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ராஜா.

பஞ்சாயத்தை பாதுகாப்புடன் நடத்த வேண்டிய ஊராட்சி மன்ற தலைவர் அதிகார வரம்பை மீறி அரசு அனுமதி பெறாமல் இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வருவது என்பது அப்பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.