சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக கட்டுமான நிறுவனம், நகைக்கடை உரிமையாளர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி. தொழிலதிபரான இவர் மார்க் குழுமம் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வங்கியில் வாங்கிய கடனை, கட்டுமான பணிக்கு பயன்படுத்தாமல் வேறு பணிக்கு பயன்படுத்தியதாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை தனியாக ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த து. இந்நிலையில், ராமகிருஷ்ணா ரெட்டிக்கு சொந்தமான சைதாப்பேட்டையில் உள்ள வீடு, திருவான்மியூரில் உள்ள கட்டுமான அலுவலகம், செங்கல்பட்டு பகுதியில் உள்ள மார்க் ஸ்வர்ணபூமி நிறுவனத்தில் நேற்று காலை முதல் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராமகிருஷ்ணா ரெட்டி முன்னாள் முதல்வர் ஒருவரின் தோழியின் பினாமியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலக்கட்டத்தில் பல கோடி ரூபாய் பணத்தை இவரது கட்டுமான நிறுவனத்தின் மூலம் மாற்றி கொடுத்ததற்கான ஆவணங்கள் பல கிக்கியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான வங்கி பணப் பரிமாற்றம் செய்த ஆவணங்கள், அந்த நேரத்தில் கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பல கோடி ரூபாய்க்கு கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் நிலங்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த தங்க நகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி என்பவருக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள வீடு, அவரது ஜூவல்லரி கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேலும், இவருக்கு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை முழுவதும் 5க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வரும் இந்த சோதனை முடிவில் தான் எத்தனை கோடி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற முழு விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.