Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிறிஸ்தவ அமைப்புகளின் ரூ.1 லட்சம் கோடி சொத்துகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு: ஒன்றிய அரசு தனி சட்டம் கொண்டு வர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கிறிஸ்தவ அமைப்புகளின் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துகள் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளன. இதை தடுக்க ஒன்றிய அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி தமிழ் பாப்பிஸ்ட் (ஸ்ட்ரிக்ட்) அறக்கட்டளை சபை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் திருநெல்வேலி தமிழ் பாப்பிஸ்ட் (ஸ்டிரிக்ட்) அறக்கட்டளை சபை செயல்பட்டு வருகிறது. சபை நிர்வாகக்குழுவில் இடம் பெற்றிருந்த சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதால் நிர்வாகக்குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்கள் தமிழ் பாப்பிஸ்ட் மிஷன் சங்கம் என்ற பெயரில் தனி சபையை தொடங்கினர். இதற்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்தோம். எங்கள் சபைக்கு சொந்தமான கோவில்பட்டி மந்திப்புதோப்பு ரோட்டில் சர்ச் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் உள்ள 4.54 ஏக்கர் சொத்தையும், புதுரோட்டில் சர்ச் மற்றும் கட்டிடம் உள்ள 18.5 சென்ட் சொத்தையும் வருவாய் ஆவணங்களில் தமிழ் பாப்பிஸ்ட் மிஷன் சங்கம் பெயருக்கு மாற்றம் செய்து கோவில்பட்டி சிறப்பு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: கிறிஸ்தவ அமைப்புகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மோசடி செய்யப்படுகின்றன. இந்த மோசடி தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. கிறிஸ்தவ அமைப்புகளை நிர்வகிப்பவர்கள், அமைப்புகளின் சொத்துக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவி செய்யவும் அமைப்புகளின் பெயர்களில் ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டது. இதில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமுள்ள சொத்துகள் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துகளை கட்டுப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் வக்புவாரிய சட்டம் உள்ளது. அதே போல கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் கடமை ஒன்றிய அரசுக்கு உண்டு.

எனவே, கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வரவும், கிறிஸ்தவ நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்ற அனுமதி பெறாமல் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வவாய் ஆவணங்களில் மாற்றம் செய்து கோவில்பட்டி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. வருவாய் ஆவணங்களில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் மனுதாரர் சபைக்கு சொந்தமானது என மாற்றம் செய்ய வேண்டும். இந்த மோசடிக்காக கோவில்பட்டி சிறப்பு வட்டாட்சியர் மற்றும் தமிழ் பாப்பிஸ்ட் மிஷன் சர்ச் அறக்கட்டளை செயலாளருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை இருவரும் மனுதாரர் சங்கத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளனர்.