சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பெண் டாக்டர் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை: சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக சென்னையில் பெண் டாக்டர், தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை அடையாறு காந்தி நகரை சேர்ந்தவர் இந்திரா. டாக்டரான இவர் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து, நேற்று காலை டாக்டர் இந்திரா வீட்டிற்கு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் காரில் வந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் வேளச்சேரி குல்மேகர் அவென்யூ பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் பிஷ்னோய் என்பவர் வீடு, மேலும், மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீடு என மொத்தம் 5 இடங்களில் நேற்று நள்ளிரவு வரை சோதனை நடந்தது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்த டாக்டர் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரியானா வழக்கில் தொடர்பு இருப்பதும், அதன் தொடர்ச்சியதாக இந்த சோதனை நடந்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான வங்கி கணக்கு விவரங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். சோதனை முடிந்த பிறகுதான் இதுதொடர்பான முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.