சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் புகலிடமாகிவிட்டது இந்தியா: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடெல்லி: சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினர் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்தியா, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் வழங்கும் அடையாள அட்டையை அங்கீகரிக்கவில்லை. மேலும், 1951ம் ஆண்டின் அகதிகள் மாநாடு மற்றும் அதன் நெறிமுறை ஆகியவற்றில் கையெழுத்திடாததால், வெளிநாட்டினர் சட்டம் போன்ற உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் வழக்குகள் கையாளப்படுகின்றன.
இந்நிலையில், இது தொடர்பான இரண்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாய்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. தங்கள் மகள்களை நாடு கடத்துவதைத் தடுக்கக் கோரிய இஸ்ரேல் நாட்டவர் ஒருவரின் மனு மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பு கோரிய சூடான் நாட்டவர் ஒருவரின் மனு ஆகியவை விசாரிக்கப்பட்டன.
அப்போது, நாட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்குவது அதிகரித்து வருவது குறித்து நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், ‘இந்தியா அனைத்துத் தரப்பினருக்குமான புகலிடமாக மாறிவிட்டது’ என்று நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.