கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் போட்டதை தட்டிக்கேட்டதால் கணவரை கொன்று தூக்கிலிட்டு நாடகமாடிய காதல் மனைவி கைது: உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்
சேத்துப்பட்டு: கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டதை தட்டிக்கேட்ட கணவரை கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் நாடகமாடிய மனைவி, மாமியாரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(27), லாரி டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா(25). இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹன்சிகா(4) என்ற மகளும், ஆஜீஸ்(3) என்ற மகனும் உள்ளனர். விஜய் டிரைவர் வேலை செய்து வருவதால் 10 முதல் 15 நாட்கள் என தொடர்ச்சியாக வெளியூர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனால் விஜய், அவரது மனைவி ஷர்மிளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிப்பாராம்.
அக்கம்பக்கத்தினரும் வீட்டிற்கு யாரோ ஒருவர் அடிக்கடி வந்துசெல்வதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஷர்மிளா அடிக்கடி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தாய் ராணிபாத்திமா வீட்டிற்கு சென்றுவிடுவாராம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நடத்தை சந்தேகம் காரணமாக மீண்டும் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய், ஷர்மிளாவை சரமாரி தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராணிபாத்திமா, விஜய்யை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக அக்கம்பக்கத்தினர் மற்றும் விஜய்யின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் விஜய்யின் சாவில் சந்தேகம் உள்ளதாக சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், ஷர்மிளா கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டுள்ளாராம். இதை பார்த்த விஜய் அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டு கட்டையாலும், கம்பியாலும் சரமாரி தாக்கி அவரது கழுத்தை கயிற்றால் கட்டி, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட விஜய் ஜன்னலில் தூக்குமாட்டி இறந்ததுபோல் சித்தரித்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ஷர்மிளா, ராணிபாத்திமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


