Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளையராஜாவின் உலகம் வேறு: ரஜினி பேச்சு

சென்னை: தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: அதிசய மனிதர் என்றால் அது இளையராஜாதான். என் கண்ணால் பார்த்த அதிசயம் இளையராஜா. அனைத்து மக்களின் நாடி, நரம்பு, ரத்தத்தில் அவரது பாடல்கள் உறைந்துள்ளது. ‘கூலி’ படத்தில் கூட அவரது பாடல்களை பயன்படுத்தினோம். இசைஞானியாக அவரை எல்லோருக்கும் தெரியும். 50 ஆண்டுகளாக இசையமைத்து வருகிறார். 50 வருடங்களில் 1500 படங்கள், 8000 பாடல்கள் உள்பட பல சாதனைகளை படைத்திருக்கிறார். இது சாதாரண விஷயம் இல்லை. அவர் செய்தது எல்லாம் எவ்வளவு பெரிய சாதனைகள் தெரியுமா.

ராகங்களை அள்ளி, அள்ளி கொடுப்பவர் இளையராஜா. ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின்போது நான் இளையராஜாவை பார்த்தேன். டிப்டாப்பாக இன் செய்து கிராப் வைத்திருந்தார். பிறகு ஒருநாள் அவரை நான் பார்க்கும்போது, மொட்டை அடித்து விபூதி வைத்து ஜிப்பா அணிந்து சாமி மாதிரி இருந்தார். அப்போது அவரை சாமி என்றுதான் அழைத்தேன். அதற்கு பிறகு அவரை நான் சாமி என்றுதான் கூப்பிடுவேன். புதிய கட்சிகளுக்கும், பழைய கட்சிகளுக்கும் சவால் விடுக்கும் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். வாங்க, 2026ல் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார். அவரது அரசு சிறப்பாக இந்த விழாவை நடத்தியுள்ளது.

நம் உலகம் வேறு, இளையராஜாவின் உலகம் வேறு. அவர் முழுக்க, முழுக்க இசையுலகில் இருக்கிறார். எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இசை என்று அவர் சொல்வார். ஆனால், கமலஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக வாசிப்பார் (சிரிக்கிறார்). சகோதரருக்கு சிந்தாத கண்ணீர், மனைவிக்கு சிந்தாத கண்ணீர், மகளுக்கு சிந்தாத கண்ணீர், நண்பர் எஸ்பிபிக்கு இளையராஜா சிந்தியதை நான் அறிவேன். இளையராஜா பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால், ஒருவருக்கு தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைக்க கூடாது.

அவ்வப்போது தோல்விகளையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் அருமை தெரியும். அவர் கொடிகட்டி பறந்தபோது, இன்னொரு இசையமைப்பாளர் வந்தார். அவர் வந்த பிறகு மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நான் உள்பட பலர் அந்த புதிய இசையமைப்பாளரிடம் சென்றோம். ஆனால், என்ன நடந்தாலும் தி.நகரிலிருந்து பிரசாத் ஸ்டுடியோவுக்கு காலை 6 மணிக்கு இளையராஜாவின் கார் எப்போதும் போல் சென்று கொண்டிருந்தது.

இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர் மறைந்தார். பிறகு இளையராஜாவின் மனைவி ஜீவா மறைந்தார். உயிராக நினைத்த மகள் பவதாரணி மறைந்தார். ஆனால், எதுவும் இளயைராஜாவை பாதிக்கவில்லை. எந்த சலனமும் இல்லாமல் இசையமைத்து கொண்டிருக்கிறார். 82 வயதிலும் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்கிறார். இளையராஜாவின் உலகமே வேறு. அதனால்தான் அவரை இன்கிரிடிபிள் இளையராஜா என்று சொல்கிறோம். இளையராஜாவுக்கு இருக்கும் திமிரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு மிகவும் தகுதியான ஆள் அவர்தான்.

* இளையராஜா பீர் குடித்துவிட்டு போட்ட ஆட்டம்! ரஜினி ‘கலகல’

இளையராஜா பேசும்போது ரஜினிகாந்த் பற்றி குறிப்பிட்டார். அதாவது, மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து தான் இசையமைத்த ‘ஜானி’ என்ற படத்தின்போது நடந்த பழைய சம்பவங்கள் குறித்து பேசி விழாவை கலகலப்பாக்கினார். ‘ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து, ‘நாம் பண்ணதை எல்லாம் விழாவில் சொல்ல போறேன். டைரக்டர் மகேந்திரன், நீங்க, நான் மூணு பேரும் சேர்ந்து குடிச்சோம். அரை பாட்டில் பீரை குடிச்சிட்டு நீங்க ஆடிய ஆட்டம் இருக்கு பாருங்க’ என்றார். நீங்க என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்’ என்று இளையராஜா சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரஜினிகாந்த் எழுந்து வந்து பேசினார்.

அவர் பேசும்போது, ‘ஒருநாள் விஜிபியில் ‘ஜானி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இளையராஜா அங்கு வந்தார். நானும், மகேந்திரனும் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, இளையராஜாவிடம் மது அருந்தும்படி சொன்னோம். அப்போது அரை பாட்டில் மது குடித்துவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே. இரவு 3 மணி வரை ஆட்டம் போட்ட இளையராஜாவிடம் மகேந்திரன் படத்தின் இசையை பற்றி பேசும்போது, ‘சும்மா இருங்க’ என்று சொன்ன அவர், ஊரில் இருக்கிற கிசுகிசு பற்றி எல்லாம் பேசினார். அத்தனையும் ஹீரோயின்கள் பற்றிய கிசுகிசுதான். இளையராஜாவிடம் பெரிய காதல் இருக்கிறது. அதுதான் இந்த இசையெல்லாம். இப்போதுதான் அவர் மாறிவிட்டார். இன்னும் அவரை பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை இன்னொரு முறை வைத்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி விழாவை கலகலப்பாக்கினார். உடனே இளையராஜா சிரித்தபடி, ‘ரஜினி இல்லாததை எல்லாம் சொல்லிவிட்டு போகிறார்’ என்று சொன்னார். விழாவில் அவர்கள் இருவருடைய வெளிப்படையான பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியது.