Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளையராஜா என்னை மன்னிக்கணும்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் பேசியதாவது: உயிரே, உறவே, தமிழே, வணக்கம். தமிழக முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, ரஜினிகாந்த், மூத்த அமைச்சர்களே என்று மொத்தமாக, சுருக்கமாக எல்லாரையும் வரவேற்க வேண்டும் என்றால் அரங்கிலும், மேடையிலும் வீற்றிருக்கும் இளையராஜா ரசிகர்களே, அனைவருக்கும் உங்களில் ஒருவனான நான் வரவேற்கிறேன். இது வரவேற்புரை அல்ல. இருந்தாலும், எல்லோரையும் மறுபடி, மறுபடி வரவேற்க வேண்டும் போல் தோன்றுகிறது. நாம் இசையில் நனைந்ததை போல, நமது மண்ணையும் இசை நனைத்திருக்கிறது.

அதிக பிரசங்கம் செய்வது நன்றாக இருக்காது. அண்ணா இளையராஜாவுடன் நான் கடந்து வந்த இந்த 50 வருட நிலையை ஒவ்வொரு வாக்கியமாக சொன்னால், இந்த விழா நேரம் போதாது. அதனால், அவருக்காக நான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். நல்லவேளை, இசைக்கலைஞர்கள் எல்லாம் போயிட்டாங்க. அதனால், ஸ்ருதி சேரவில்லைன்னா இளையராஜா மன்னிச்சுக்குங்க. இந்த விழாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். மாண்புமிகு முதலமைச்சருக்கு பெயர் வைத்த அதே மாமனிதர்தான், என் அண்ணன் இளையராஜாவுக்கும், எனக்கும் பெயர் சூட்டினார்கள். இந்த விழாவில் நான் பேசுவது, எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பது என் அண்ணனுக்கு தெரியும். இந்த இசைஞானிதான் என் அண்ணன்.

* கமல் பாடினார்

‘‘உன்னை ஈந்த உலகிற்கொரு நன்றி, நம்மை சேர்த்த இயலுக்கொரு நன்றி, மாறாத வலிகள் சொல்லும் நன்றி நன்றி, மனம் கொண்ட உறவு சொல்லும் நன்றி நன்றி, உறவே வாழ்! இசையே வாழ்! தமிழே வாழ்!’’ என்ற உருக்கமான பாடலை ‘ஹேராம்’ படத்தில் வரும் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ என்ற மெட்டில் மேடையில் கமல்ஹாசன் பாடினார்.

* நேற்று மாலை 5.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது மேடையில் இருந்த இசைக்கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களை பாடினர்.

* இருக்கையில் அமர்ந்தபடி இளையராஜா, ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ என்ற பாடலை பாடினார். அருகில் அமர்ந்திருந்த கமல்ஹாசனிடம் இளையராஜா மைக்கை நீட்ட, அவரும் இணைந்து பாடினார். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் ரசித்த கேட்டனர்.

* கமல்ஹாசன் எழுந்து பார்வையாளர்களை பார்த்து, ‘இந்த நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்கள் அனைத்தும் முதல்வரின் விருப்ப பாடல்கள். அவர்தான் இந்த பாடல்களை தேர்வு செய்து கொடுத்தார்’ என்று சொன்னார். அதை கேட்டவுடன் அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

* ‘தளபதி’, ‘நிழல்கள்’, ‘16 வயதினிலே’, ‘ராஜபார்வை’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘வெற்றி விழா’ போன்ற படங்களின் பாடல்கள் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘சைக்கோ’ என்ற படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் ‘உன்ன நினைச்சு நினைச்சு உருகி போனேன் மெழுகா’ என்ற பாடலும் பாடப்பட்டது.

* ஒவ்வொரு பாடல் முடிவிலும் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்து அரங்கை அதிர வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகா, மகன் இன்பநிதி ஆகியோருடன் பங்கேற்றார்.

* லண்டனில் இளையராஜா இசைத்த சிம்பொனி இசையை அதே வெளிநாட்டு கலைஞர்கள் வந்து ேமடையில் இசைத்தனர். இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி தொடர்ந்து 2 மணி நேரம் நடந்தது. சிம்பொனி இசை முடிந்ததும் அரங்கில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். சிம்பொனி இசை கேட்டு கமல்ஹாசன் அழுதுவிட்டார். அவரது கைக்குட்டை நனைந்ததாக இளையராஜா தெரிவித்தார்.

* இளையராஜா பேசும்போது, ‘‘எனக்கு பாராட்டு விழா நடத்தும் யோசனை முதல்வருக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. அதை நினைக்கும்போது எனக்கு பேச்சு வரவில்லை’’ என்றபோது தொடர்ந்து இளையராஜாவால் பேசமுடியவில்லை. அவர் லேசாக கண் கலங்கினார்.