ரூ.45 கோடியில் சென்னை ஐஐடி முதல் செல்லம்மாள் கல்லூரி வரை சாலை விரிவாக்கம்: 2.5 கி.மீ. தூரம் 6 வழிச்சாலையாக மாற்ற திட்டம்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
* சிறப்பு செய்தி
போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சென்னை ஐஐடி முதல் செல்லம்மாள் கல்லூரி வரை 2.5 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், 6 வழிச்சாலையாக மாற்றும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகளும் நடந்து வருகிறது. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடையாறு சர்தார் பட்டேல் சாலை சென்னையின் மிகவும் முக்கியமான சாலையாகும். சர்தார் பட்டேல் சாலை, கிண்டியில் உள்ள ஜிஎஸ்டி சாலையை அண்ணா சாலை வழியாக அடையாறுடன் இணைக்கும் ஒரு முக்கியமான இணைப்பு சாலையாகும். இந்த சாலை மத்திய கைலாஷ், கிண்டி மற்றும் அடையாறு போன்ற முக்கியப் பகுதிகளை இணைக்கிறது. ஆளுநர் மாளிகையிலிருந்து தொடங்கி அடையாறு மலர் மருத்துவமனை வரை நீள்கிறது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த ராஜிவ் காந்தி சாலை சந்திப்பு, பரபரப்பாக காணப்படும் அடையாறு சந்திப்பு, வேளச்சேரி சாலை சந்திப்பு உள்ளிட்ட பல சாலைகள் இந்த சாலையின் வழியாகவே ஆரம்பமாகிறது.
மேலும் சர்தார் பட்டேல் சாலையில், காந்தி மண்டபம் சந்திப்பு முதல் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு வரை, சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கிண்டியில் இருந்து அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கிண்டி, பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அடையாறு, ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர்., நோக்கி பயணிக்க, சர்தார் பட்டேல் சாலை வழியாக செல்ல வேண்டும்.
இச்சாலையில், காலை முதல் நள்ளிரவு கடந்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பீக் ஹவர் எனப்படும் அலுவலக நேரங்களில், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக அடையாறு மேம்பாலம் இறக்கத்திலிருந்து கிண்டி சந்திப்பு வரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் கடந்து செல்ல 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாகிறது. இதனால், சர்தார் பட்டேல் சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து, மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் வடிவ மேம்பாலம் கட்டி வருகிறது. அதனை தொடர்ந்து அதிகளவில் வரும் வாகனங்களால், கேன்சர் மருத்துவமனை சிக்னலில் இருந்து சைதாப்பேட்டை, சின்னமலை வரை நெரிசல் நீடிக்கும்.
அதுவும், மேம்பாலத்தை ஒட்டி உள்ள கோட்டூர்புரம் நோக்கி செல்லும் அணுகு சாலை, ஒரு பேருந்து மட்டுமே செல்லும் வகையில் குறுகலாக உள்ளது. அங்கு சிவப்பு சிக்னல் போடும்போது, அண்ணா பல்கலை வாசல் வரை நெரிசல் நீடிக்கிறது. அண்ணா பல்கலை நுழைவாயில் சாலையில் சிவப்பு சிக்னல் போடும்போது, வாகன நெரிசல் சின்னமலை வரை நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சர்தார் பட்டேல் சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, ஐ.ஐ.டி., நுழைவாயிலில் இருந்து, கிண்டி செல்லம்மாள் கல்லூரி சிக்னல் வரை, 2.5 கி.மீ., துாரம் வரை, 70 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகரில் முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படும் சாரதர் பட்டேல் சாலை விரிவாக்க திட்டம், நீண்ட இடைவெளிக்குப் பின் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. கிட்டதட்ட 2006ம் ஆண்டு இதே சாலை விரிவாக்கத்திற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்போது இந்த சாலை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்ததால் திட்டம் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டது. தற்போது, மாநில நெடுஞ்சாலைத்துறை நேரடியாக இந்த சாலையை பராமரிக்கும் பொறுப்பில் இருக்க, திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
அதன்படி ஐ.ஐ.டி., நுழைவாயிலில் இருந்து, கிண்டி செல்லம்மாள் கல்லூரி சிக்னல் வரை, 2.5 கி.மீ. தூரம் வரை 70 அடி சாலையாக அதாவது 6 வழிச்சாலையாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாலையின் பரப்பளவையும், நடைபாதை வசதிகளையும், போக்குவரத்து திறனையும் அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ஐஐடி முதல் ஆளுநர் மாளிகை வரை 1.7 கிலோ மீட்டர் வரையும், இரண்டாம் கட்டமாக ஆளுநர் மாளிகை முதல் அண்ணா சாலை வரை 0.8 கிலோ மீட்டருக்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த சாலை விரிவாக்கத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதிகள் அரசுக்கு சொந்தமான இடங்கள் என்பதால் பணிகளை விரைவாக தொடங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
* நிலம் கையகப்படுத்த தேவையில்லை
சாலை விரிவாக்கத்திற்கு தேவையான பெரும்பாலான நிலங்கள் ஏற்கனவே அரசுத் துறைகளுக்கு சொந்தமானவை. இதனால் தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் விரைவில் விரிவாக்க பணிகள் முடிவடைவும்.
* ஒலியெதிர்ப்பு சுவர்
சர்தார் பட்டேல் சாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையின் சுற்று சுவர் பகுதியில் ஒலியெதிர்ப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. இதனால், நோயாளிகளுக்கு சாலை ஒலி தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
* பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை
பெரும்பாலான மாணவர்கள், மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையில் நடந்து செல்லும் சூழ்நிலையில், நடைபாதைகள் இல்லாதது குறிப்பிடத்தக்க சிக்கலாக இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் பாதசாரிகளுக்கு நடைபாதைகள் அமைக்கப்படுகிறது.
* புதிய பைபாஸ்
காந்தி மண்டபம் சாலையில் இருந்து, சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில், சி.எல்.ஆர்.ஐ., வளாகத்தில் 900 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் புதிதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக, சர்தார் பட்டேல் சாலையை அடைந்து, அங்கிருந்து எளிதாக அடையாறு, ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர்., செல்ல முடியும். இதற்கான நிலத்தை சி.எல்.ஆர்.ஐ. நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. சாலை அமைக்கும் பணி, மீதமுள்ள இடத்தில் நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2 கட்டமாக விரிவாக்க பணிகள்
* சென்னை ஐஐடி முதல் ஆளுநர் மாளிகை வரை 1.7 கிலோ மீட்டர் வரை முதற்கட்டமாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
* ஆளுநர் மாளிகை முதல் அண்ணா சாலை வரை (செல்லம்மாள் மகளிர் கல்லூரி) 0.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.