இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்: கனிமொழி எம்.பி!
சென்னை: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு, இதுகுறித்து இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி நிராகரித்துள்ளது. மேலும், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் அளிக்காமலும் கவர்னர்கள் கிடப்பில் போட அதிகாரம் இல்லை.
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், நிராகரித்தல் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஒன்றை மட்டுமே கவர்னர் தேர்ந்தெடுக்க விருப்புரிமை உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக வரவேற்றுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன். என்று அவர் பதிவிட்டுள்ளார்.


