செல்போனில் முன்பின் தெரியாத நபர்கள் அழைத்தால் அவர் யார் என அறியும் வசதி இன்னும் 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. செல்போனில் அழைப்பவரின் பெயரை திரையில் காண்பிக்கும் வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நுகர்வோருக்கு உதவும் வகையில் செல்போன்களில் அழைப்பாளர் பெயரை காண்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இதற்காக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் ’சிஎன்ஏபி’ எனப்படும் அழைப்பு பெயர் தரவுதள வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது.
இந்நிலையில், செல்போனில் அழைப்பவரின் பெயரை திரையில் காண்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்துவதில் ஒன்றிய அரசின் தொலைதொடர்பு துறைக்கும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்ட உடன் புதிய வசதி 6 மாத காலத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு செல்போனில் அழைப்பவரின் செல்போன் எண்ணுக்கு பதில் அவரது பெயரே திரையில் காண்பிக்கப்படும். இந்த வசதி 4ஜி மற்றும் 5ஜி வசதி கொண்ட செல்போன்களில் மட்டும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


