கணவரை தன்னிடமிருந்து திட்டமிட்டு பிரித்திருந்தால் அப்பெண் மீது மனைவி வழக்கு தொடரலாம்: டெல்லி ஐகோர்ட் ஆணை!
டெல்லி: கணவரை தன்னிடமிருந்து திட்டமிட்டு பிரித்திருந்தால் அப்பெண் மீது மனைவி வழக்கு தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பானுஸ்ரீ பாகல் மற்றும் தன் கணவர் மீது ஷெல்லி மகாஜன் என்ற பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், தன் கணவர் தன்னை நேசிப்பதை பானுஸ்ரீ பாகல் திட்டமிட்டுத் தடுத்ததாகவும், தன்மீது கணவர் அன்பு செலுத்துவதை தடுத்ததால் தனக்கு பானுஸ்ரீ பாகல் இழப்பீடு தர உத்தரவிட கோரியும் ஷெல்லி மகாஜன் மனுவில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கணவர் நேசிப்பதைத் தடுக்கும் பெண் மீது இழப்பீடு கோரி மனைவி வழக்கு தொடரலாம் என்றும், குடும்ப நல நீதிமன்றத்துக்கு பதில் சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனைவி வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், ஷெல்லியின் கணவர், பானுஸ்ரீ பாகல் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ஐகோர்ட் நீதிபதி பி.கே.கவுரவ் ஆணையிட்டுள்ளார்.