Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘‘அதிமுக ஒன்றிணைய சம்மதிக்காவிட்டால் தொண்டர்களால் அகற்றப்படுவாய்’’ ஸ்ரீவைகுண்டத்தில் எடப்பாடிக்கு பட்டை நாமம் போட்ட தொண்டர்கள்

ஸ்ரீவைகுண்டம்: கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பா.ஜ. கூட்டணி வெற்றி பெற பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மற்றும் ஒன்றிய பா.ஜ. அமைச்சர்கள் விரும்புகின்றனர். ஆனால் இவர்களை இணைத்தால் தன்னுடைய பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து என்று கருதி இவர்களை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் வெளியே இருக்கும் தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறியதோடு, இதை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதையடுத்து அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். ஆனால் கட்சியை விட்டு நீக்கவில்லை.

செங்கோட்டையனின் இந்தப் பேச்சை ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும் அவரது இந்த முடிவு கட்சிக்கு வெளியே இருக்கும் அவர்களுக்கு வலு சேர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் விளைவாக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரனையும், அமமுக தலைவர் டிடிவி தினகரனையும் பா.ஜ. மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவின் ஒன்றிணைப்புக்கு எதிராக நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம்- வெற்றி பெறுவோம், ஒன்றிணைய வேண்டும்- 2026ல், அஇஅதிமுக ஆட்சியமைக்க வேண்டும். கழக வெற்றி கனவை நிறைவேற்றுவோம். எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைய சம்மதிக்கா விட்டால் தொண்டர்களால் அகற்றப்படுவாய்’’ அஇஅதிமுக- ஸ்ரீவைகுண்டம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன்,வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன், ஒன்றிய செயலாளர் செந்தில்பெருமாள், மாவட்ட தலைவி மாரியம்மாள், வட்டாரத் தலைவர் மாடசாமி, வார்டு செயலாளர் அருணாச்சலம், மணி, அதிமுக சசிகலா பேரவை ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பட்டை நாமம் போட்டு, கையில் தட்டு ஏந்தியவாறு படம் போட்டுள்ளனர். இந்த போஸ்டர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், சமூக வலை தளங்களிலும் வைரலாகி வருகிறது.

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு பிரசாரத்தின் போதும், அவர் ஸ்ரீவைகுண்டம் வந்த போது ஓபிஎஸ் அணியினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.