கரூர் விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக பாஜ சார்பில் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்தும் பணி சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு நிதியுதவி உடன் அவிநாசி நான்கு வழிச்சாலை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்து கொண்டுள்ளோம். இதே போல் மேட்டுப்பாளையத்தில் பைபாஸ் சாலை அமைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் நித்தின் கட்கரியிடம் பேசியுள்ளேன். விரைவில் அப்பணிகளும் துரிதமாக நடைபெறும்.
கரூர் துயர சம்பவம் குறித்து எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பவ இடங்களில் ஆய்வு செய்து அதற்குரிய அறிக்கையை தேசிய தலைவர் மற்றும் அமைச்சர்களிடம் வழங்கியுள்ளனர்.அதன் விசாரணை அறிக்கை வெளிவரும் முன் இதுகுறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.