Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்; டெல்டாவில் 5,802 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை: நாளை மறுநாள் விசர்ஜனம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சை: விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்டாவில் 5,802 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நாளை மறுநாள் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. அனைத்து இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி தஞ்சை மாவட்டம் முழுவதும் 697 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. மாநகரில் 85 சிலைகள், ஊரக பகுதிகளில் 145 சிலைகள், திருவிடைமருதூரில் 95, திருவையாறில் 77, பட்டுக்கோட்டையில் 133, கும்பகோணத்தில் 87, வல்லத்தில் 36, ஒரத்தநாட்டில் 36 என மொத்தமாக 697 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் 89 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் உட்பட பல்வேறு இடங்களில் 418 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் நகரில் 85 சிலைகள் வைக்கப்பட்டது. மேலும் கொரடாச்சேரி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்கள் என மாவட்டம் முழுவதும் 395 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்துப்பேட்டை பகுதியில் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, வேலாயுதம்பாளையம் உட்பட 202 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 707 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் 243 சிலைகள், புறநகரில் 939 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 1182 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், குன்னம், வேப்பந்தட்ைட, அரும்பாவூர் பகுதியில் 1,175 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வி.களத்தூர், லப்பைக்குடிக்காட்டில் இருதரப்பு மக்களிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக சமீபத்தில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் பங்கேற்று விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அந்த பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் 5,902 சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்களது வீடுகளில் களிமண்ணாலான விநாயகர் சிலைகளை சொந்தமாக செய்து வைத்தும், விலை கொடுத்து வாங்கி வைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் இலைகளில் விநாயகருக்கே உரிய பிரசாதமான கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி டெல்டா மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் நேற்று மாலை மற்றும் இன்று காலை மக்கள் கூட்டம் அலைமோதியது. மார்க்கெட்டுகளில் பழங்கள் மற்றும் பொரி, வாழைத்தார், வாழை இலை, தோரணங்கள் விற்பனை ஜோராக நடந்தது. மேலும் ஆங்காங்கே களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்காக மக்கள் சிலைகள் வாங்கி சென்றனர்.