புதுடெல்லி: தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.வி நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், ‘‘சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமானது சாதாரண விஷயம் கிடையாது.
சுமார் 38 காவல் நிலையங்களில் இருந்த 41 ஆவணங்கள் திருடுபோய் உள்ளது. அவை அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. மேலும் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகளின் விவரங்கள் காணாமல் போன ஆவணங்களில் இருந்தது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஆவணங்கள் குறித்த விவரங்கள் எல்லாம் டிஜிட்டல் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லையா.
அப்படி செய்திருந்தால் அழிந்திருக்க வாய்ப்பில்லையே என்று கேட்டார். இதையடுத்து அதற்கு மனுதாரர், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சம்பவம் நடைபெற்றதால், அவை கணினி மயமாக்கப்பட்டு இருப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்’’ என குறிப்பிட்டார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளோம்.
அதில் 1985ல் தொடங்கி பல்வேறு சிலைகள் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் தற்போதுள்ள விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் தொலைந்தது எப்படி. அதற்கான காரணம் என்ன. மொத்தம் 375 சிலைகள் திருடப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. 41 ஆவணங்கள் தொலைந்து உள்ளது.
இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. ஆவணங்கள் காணாமல் போனது குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படி என்றால் அதன் மீதான நடவடிக்கை என்ன என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ‘‘தமிழ்நாட்டிலிருந்து சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டிருப்பதால் ஒன்றிய அரசு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் ஆகியோரையும் இந்த வழக்கில் மனுதாரராக இணைக்கிறோம்.
குறிப்பாக சிலைக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் எப்படி காணாமல் போனது என்பது குறித்த முழுமையான விளக்கங்களை தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.