Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி: பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார்

* பதற்றத்தை உருவாக்குகிறார், அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு

சேலம்: சென்னை அப்போலோவில் பாமக தலைவர் ராமதாஸ், ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படவே இல்லை. ராமதாசை பார்க்காமலேயே சென்றவர் தான் அன்புமணி. அவர் மகனுக்கான கடமையில் இருந்து தவறி விட்டார் என சேலத்தில் பாமக இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ கடுமையாக குற்றம் சாட்டினார். சேலத்தில் பாமக இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாமக தலைவர் ராமதாஸ், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரவு 7 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மகள் ஸ்ரீகாந்தி உடன் இருந்தார். வழக்கமான பரிசோதனை என்பதால், நாங்கள் கூட யாரும் செல்லவில்லை. அன்றைய தினம் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்படவே இல்லை. அரைமணி நேரம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து விட்டு, அறைக்கு வந்து விட்டார். ஆனால், அடுத்த நாள் காலை அவரை பார்க்க வந்த அன்புமணி, ‘ராமதாஸ் ஐசியூவில் இருப்பதாகவும், 6 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்’ என்றும் ஒரு செய்தியை கூறி விட்டு சென்று விட்டார்.

இந்த செய்தியை கேட்டு, நாங்கள் அனைவரும் பதற்றத்தோடு மருத்துவமனைக்கு சென்றோம். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் வந்து பார்த்தனர். ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்படாத நிலையில், ஐ.சி.யூ.,வில் இருப்பதாக கூறி, பதற்றத்தை ஏற்படுத்தியதே அன்புமணி தான். அவர் மருத்துவமனைக்கு வந்து, டாக்டர் செங்கோட்டுவேலை மட்டும் பார்த்து விட்டு சென்றுவிட்டார். அவர் ராமதாஸை பார்க்காமல் வெளியேறினார். அவர் பார்ப்பதை யாராவது தடுக்க முடியுமா?. கதவை தள்ளிக்கொண்டு சென்றாவது பார்க்க வேண்டாமா?.

நீங்கள் ஏன் தந்தையை பார்க்கவில்லை?. மருத்துவமனைக்கு சென்றும் சந்திக்காமல் செல்ல காரணம் என்ன?. இதற்கெல்லாம் அவர் தான் விளக்கமளிக்க வேண்டும். பாமக தலைவர் ராமதாசை காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள், சுற்றியிருப்போரை தொலைத்து விடுவேன் என்றெல்லாம் அன்புமணி கூறுவது, அவரது ஆற்றாமையை காட்டுகிறது. இதற்கு முன் ராமதாஸ் அருகில் யாரும் வரக்கூடாது என பார்த்தார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை.

மருத்துவமனைக்கு ராமதாசை பார்க்க வருவதாக, முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் போனில் கேட்டபோது, ராமதாசிடம் சென்று கேட்டோம். அவர், என்னை பார்த்து நலம் விசாரிக்க வருபவர்களை நீங்கள் தடுக்க வேண்டாம். அவர்கள் வந்து பார்த்து பேசி விட்டு போகட்டும் என அவரே கூறினார். அதன் பிறகே அனைவரும் வந்து பார்த்தார்கள். ஜி.கே.மணியோ, நானோ யாரையும் அழைக்கவில்லை. அவர்கள் போனில் கேட்டதற்கு பதில் கூறினோம், அவ்வளவு தான்.

தலைவர் ராமதாசை பார்க்க வந்த முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை அன்புமணி கொச்சைப்படுத்தலாமா?. ராமதாசுடன் இருந்தது அவரது அக்கா தான். நாங்கள் எல்லாம் வெளியில் இருந்தோம். தற்போது தொலைத்து விடுவேன் எனக்கூறும் அவர், நியாயமாக மகனாக மருத்துவமனை வாசலில் இருந்தபடி, பார்க்க வரும் தலைவர்களிடம் பேசியிருக்க வேண்டும்.

அதை செய்யாமல், மகன் என்னும் கடமையில் இருந்து தவறி விட்டார். ஏற்கனவே பெற்ற தந்தையை கட்சியை விட்டு போ என்றும், வீட்டு காம்பவுண்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சொன்னவர் தான் அன்புமணி. தற்போது தொலைத்து விடுவேன் எனக்கூறி பாமகவையும், கட்சி தொண்டர்களையும் அன்புமணி தொலைத்து விட்டார்.

இவ்வாறு அருள் எம்எல்ஏ கூறினார்.

* அன்புமணியால் மட்டுமே ராமதாசுக்கு தொந்தரவு: பாமக பொதுச்செயலாளர் பதிலடி

பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சென்ற மாதம் நீக்கப்பட்ட அன்புமணி தன்னை ஆதரிப்பவர்கள் மத்தியில் 10ம் தேதியன்று ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அப்போது அன்புமணி பேசும்போது ராமதாஸை வைத்து கண்காட்சி நடத்துகிறார்கள் என்றும் மேலும் அவருக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

ராமதாஸுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏதாவது தொந்தரவு ஏற்படுமென்றால் அது அன்புமணியால் மட்டுமே ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ராமதாஸுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகளையும், அவமரியாதைகளையும் அவர் கொடுத்து வருவது உலகமறிந்த ஒன்று. தற்போது அன்புமணியின் பேச்சு ராமதாஸின் மனதை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.

அன்புமணி மருத்துவமனைக்கு வந்த தலைவர்களை கண்காட்சி காண வந்தவர்கள் என்று பேசி இருப்பது உண்மையிலேயே அந்த தலைவர்களை அவமதிப்பது போன்றதாகும். அதையும் தாண்டி தொலைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுப்பது தரம்தாழ்ந்த சொல்லாகும். இதனை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராமதாஸ் சார்பிலும் வன்மையாக கண்டிப்பதோடு, இனி இவ்வாறான மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அன்புமணியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தலைவர் ஜி.கே.மணி கொறடா நான்தான்

‘சட்டமன்றத்தில் தலைவராக ஜி.கே.மணியும், கொறடாவாக நானும் தொடர்கிறோம். அதை மாற்ற இயலாது. தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம், பாமக தலைவருக்கு வந்துள்ளது. அந்த தலைவர் ராமதாஸ் தான். மோசடியாக பாமக தலைமை அலுவலக முகவரியை மாற்றி, அந்த கடிதத்தை பெற்றுள்ளார்கள். அதனை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து விட்டோம். அதனால், ராமதாசிடம் தான் பாமகவும், மாம்பழம் சின்னமும் உள்ளது’ என்று அருள் தெரிவித்தார்.

* சேலம் பொதுக்குழுவில் ராமதாஸ் பங்கேற்கிறார்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம், வரும் 26ம் தேதி, சேலம் புதுரோட்டில் உள்ள டிஎஸ்கே மஹாலில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் பங்கேற்று பேச இருக்கிறார். அந்த பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என அருள் எம்எல்ஏ தெரிவித்தார்.

* ‘ராமதாசை கடவுளுனு சொன்னவங்கள காணோம்..’

‘பாமக தலைவர் ராமதாசை கடவுள் என்று கூறும் அந்த 3 எம்எல்ஏக்கள், மருத்துவமனைக்கு வந்து பார்க்காதது வருத்தமளிக்கிறது. அதேபோல், ராமதாசை கொன்று விடுவேன் என மிரட்டியவர்களுக்கு எல்லாம் பொறுப்பு கொடுத்து பக்கத்தில் உட்கார வைத்திருக்கிறார் அன்புமணி’ என்று அருள் தெரிவித்தார்.