துபாய்: ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் லாரா உல்வார்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2ம் இடத்துக்கு சரிந்துள்ளார். மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில், ஐசிசி, மகளிருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியிலும், இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அடுத்தடுத்து சதங்கள் விளாசி அசத்திய தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் லாரா உல்வார்ட், ஐசிசி தரவரிசை பட்டியலில், 814 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 811 புள்ளிகளுடன் ஒரு நிலை தாழ்ந்து 2ம் இடத்துக்கு சரிந்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், நங்கூரமாய் நின்று 127 ரன்கள் விளாசி வெற்றி தேடித்தந்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் 9 நிலைகள் உயர்ந்து 10வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 3, இங்கிலாந்தின் நாட் சிவர்பிரன்ட் 4, ஆஸியின் பெத் மூனி 5, அலிஸா ஹீலி 6, நியூசிலாந்தின் சோபி டிவைன் 7, ஆஸியின் எலிசி பெரி 8, வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் 9வது இடங்களில் உள்ளனர். உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஆஸி வீராங்கனை போப் லிட்ச்பீல்ட் 13 நிலைகள் உயர்ந்து 13வது இடத்துக்கும், இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 நிலைகள் உயர்ந்து 14வது இடத்துக்கும் சென்றுள்ளனர்.
