லண்டன்: இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா, ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தற்போது 21 வயதாகும் ஷபாலி வர்மா, 15வது வயதிலேயே இந்திய கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்தவர். டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை மிக இள வயதில் எட்டிய பெருமைக்கு சொந்தக்காரர். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் பல முறை அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய ஷபாலி வர்மா, ஐசிசி டி20 மகளிர் தரவரிசைப் பட்டியலில் 4 நிலைகள் உயர்ந்து 9ம் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு கிடைத்த புள்ளிகள், 655.
இப்பட்டியலில் ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி, 794 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேலி மாத்யூஸ் 774 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 767 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் தொடர்கிறார். ஆஸியின் தஹ்லியா மெக்ராத், தென் ஆப்ரிக்காவின் லாரா உல்வார்ட், தஸ்மின் பிரிட்ஸ், இலங்கை வீராங்கனை சமாரி அத்தப்பட்டு, நியூசிலாந்து வீராங்கனை சூஸி பேட்ஸ், அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
தவிர, இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிகஸ் 2 நிலைகள் தாழ்ந்து 14ம் இடத்திலும், ஹர்மன் பிரீத் கவுர் மாற்றமின்றி 15ம் இடத்திலும் உள்ளனர்.


