லண்டன்: ஐசிசி ஆடவர் ஒரு நாள் போட்டிகளில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 2ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஐசிசி ஒரு நாள் பேட்டிங்கிற்கான சமீபத்திய தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் ரோகித் சர்மா 781 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, 773 புள்ளிகளுடன், 2 நிலைகள் உயர்ந்து 2ம் இடத்தை பிடித்துள்ளார். ரோகித்திற்கும், கோஹ்லிக்கும், வெறும் 8 புள்ளிகளே வித்தியாசம் உள்ளது.
தென் ஆப்ரிக்கா அணியுடனான 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விராட் கோஹ்லி, 2 சதம், ஒரு அரை சதம் விளாசியதே, தரவரிசை பட்டியலில் அவரது உயர்வுக்கு காரணம். தவிர ரோகித் சர்மாவும், 2 அரை சதங்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உந்து சக்தியாக திகழ்ந்தார். இப்பட்டியலில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ஒரு நிலை தாழ்ந்து 3ம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் ஜாட்ரன் ஒரு நிலை தாழ்ந்து 4ம் இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் சுப்மன் கில் 5, பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் 6, அயர்லாந்தின் ஹேரி டெக்டார் 7, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 8, இலங்கை வீரர் சரித் அசலங்கா 9, இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர் 10வது இடங்களில் உள்ளனர்.
இந்தியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்ரிக்கா வீரர்கள் குவின்டன் டி காக் 3 நிலைகள் உயர்ந்து 13ம் இடத்தையும், அய்டன் மார்க்ரம் 4 நிலைகள் உயர்ந்து 25ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தியாவின் கே.எல்.ராகுல் 2 நிலைகள் உயர்ந்து 12வது இடத்தை பிடித்துள்ளார்.


