Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குத் திருட்டுப் புகார் விமர்சனம் தலைமை தேர்தல் ஆணையரின் குடும்பத்தினர் மீது அவதூறு: ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

புதுடெல்லி: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கடந்த 18ம் தேதி பீகாரின் கயாவில் நடந்த கூட்டத்தில், ‘தற்போது மோடி அரசு ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளது. விரைவில் பீகார் மற்றும் டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும் நாள் வரும்.

அப்போது, நாடு முழுவதும் வாக்குகளைத் திருடிய தேர்தல் ஆணையர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற இரண்டு ஆணையர்களையும் பகிரங்கமாக எச்சரித்தார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன் விளைவாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் கடுமையான தனிப்பட்ட தாக்குதல்களும், கேலி கிண்டல்களும் தொடங்கின. ஞானேஷ் குமாரின் இரு மகள்கள், மருமகன்கள் மற்றும் அவரது இளைய சகோதரர் என அனைவரும் இந்திய வருவாய்த் துறையில் மூத்த அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய தாக்குதல்கள், அவர்களது அதிகாரப்பூர்வமான கடமைகளுடன் தொடர்பில்லாதவை. பொது சேவையில் கண்ணியத்தையும், நேர்மையையும் எப்போதும் நாங்கள் நிலைநிறுத்துவோம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.