Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை-மாணவன் கடத்தல் பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜன் துப்பாக்கியுடன் அதிரடி கைது: போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பியவர்

தூத்துக்குடி: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை, மாணவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜன், துப்பாக்கியுடன் கோவையில் கைது செய்யப்பட்டார். இவர் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பியவர் ஆவார். தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜன் (34). பிரபல ரவுடியான இவர், சூரங்குடியில் கடந்த 2022ல் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி 28ம்தேதி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மார்ச் 1ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பிறகு மார்ச் 5ம்தேதி அவரை விளாத்திகுளம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் பேரூரணி சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும் போது, தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் அவரது நண்பர் மற்றும் மனைவி பிரியா ஆகியோர் உதவியுடன் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு ஐகோர்ட் மகாராஜன் தப்பிச் சென்றார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவரது 15 வயது மகன் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ஐகோர்ட் மகாராஜன் ஈடுபட்டுள்ளார்.

விசாரணையில் போலீசாருக்கு பயந்து ஐகோர்ட் மகாராஜா மதுரையில் பதுங்கியிருந்ததும், அப்போது அவருக்கு விளாத்திகுளம் அருகேயுள்ள துளசிப்பட்டியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா பழக்கமாகி, உதவி செய்து வந்துள்ளார். பின்னர் அங்கு சூர்யா வாங்கிய கடனுக்காக அவரது அழகு நிலையம் மற்றும் வீட்டை மைதிலி என்பவரது தலைமையிலான சிலர் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சூர்யாவுக்கு ஆதரவாக மைதிலியின் மகனான 15 வயது சிறுவனை ஐகோர்ட் மகாராஜன் கடத்தி சென்று 2 கோடி ரூபாய் கேட்டுள்ளார். மதுரை போலீசார் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு சிறுவனை மீட்டனர். இந்த வழக்கில் ஐகோர்ட் மகாராஜனையும், சூர்யாவையும் போலீசார் தேடி வந்தனர்.

சிறுவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மாஜி மனைவி சூர்யா, குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியிருந்த கடிதத்தில் சிறுவன் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் ஐகோர்ட் மகாராஜன் கைது செய்யப்பட்டால், இதில் உண்மைகள் வெளிவரும் என்றும் தெரிவித்திருந்ததாக போலீசார் கூறினர். இதனிடையே தூத்துக்குடி தனிப்படை எஸ்ஐ பிரட்ரிக் ராஜன் தலைமையிலான தனிப்படையினர், ஐகோர்ட் மகாராஜனை நேற்று கோவையில் கைது செய்தனர். அவர் வைத்திருந்த ஏர்கன் வகையை சேர்ந்த கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவரை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகே சூர்யாவின் தற்கொலைக்கான காரணங்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. ஐகோர்ட் மகாராஜனுக்கு உதவிய அவரது மனைவி பிரியதர்ஷினியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

* தவறி விழுந்து கை ஒடிந்தது

4 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில், கோவையில் பதுங்கியிருந்த ஐகோர்ட் மகாராஜனை நள்ளிரவில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஒரு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து தப்ப முயன்றபோது தவறி கீழே விழுந்ததில் அவரது வலது கை உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.