சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு செயலாளரான சுன்சோங்கம் ஜடக் சிரு போக்குவரத்து துறை மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளராகவும்,
நிதித்துறை சிறப்புச் செயலாளரான பிரசாந்த் மு வடநெரே நிதித்துறை செலவினம் அரசுச் செயலாளராகவும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரான ராஜகோபால் சுன்கரா நிதித்துறை அரசு இணைச் செயலாளராகவும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் இயக்குநரான தீபக் ஜேக்கப் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அருங்காட்சியகங்கள் இயக்குநரான கவிதா ராமு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் இயக்குநராகவும், மீனவளம் மற்றும் மீனவர் நல ஆணையரான கஜலட்சி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரான முரளீதரன் மீன்வளம் மற்றும் மீனவர் நலம் இயக்குநராகவும், குடிநீர் வடிகால் வாரியம் இயக்குநர் கிரண் குராலா வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராகவும்,
வீட்டுவசதி வாரிய இயக்குநரான சமீரன் குடிநீர் வடிகால் வாரிய இயக்குநராகவும், ஈரோடு வணிகவரி இணை ஆணையரான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கோயம்புத்தூர் வணிக வரி இணை ஆணையராகவும், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியரான நாராயண சர்மா சென்னை வணிக வரி இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.