மக்களின் குறைகளை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக எலுமிச்சை பழம் அறுத்துப்போடுவேன்: சட்டீஸ்கர் பாஜக எம்பி பேச்சால் சர்ச்சை
ராய்ப்பூர்: பொதுமக்களின் குறைகளைக் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு, பாஜக எம்பி பில்லி சூனியம் வைத்து மிரட்டல் விடுத்துள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கான்கேர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி.யான போஜ்ராஜ் நாக், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, அதிகாரிகளிடமிருந்து ‘பேய்களை விரட்டுவது’ போன்ற உருவகங்களைப் பயன்படுத்தியதும், நவராத்திரியின் போது தனக்கு ‘தெய்வம் அருள் வந்துவிட்டதாகக்’ கூறி பொது இடத்தில் நடனமாடியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தம்தாரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘சட்டவிரோத சுரங்கங்களைத் தடுக்கத் தவறிய மற்றும் பொதுமக்களின் புகார்களைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள், மக்கள் பணியைச் செய்யத் தவறும் மற்றும் செல்போன் அழைப்புகளுக்குப் பதிலளிக்காத அதிகாரிகளின் பெயரில் எலுமிச்சை பழத்தை
மந்திரம் செய்து அறுத்துப்போடுவேன். பில்லி, சூனியம் வைத்து சாபமிடுவேன்’ என்று அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
பஸ்தார் பகுதியில், ஒருவரின் பெயரில் எலுமிச்சையை அறுத்துப்போடுவது என்பது, அந்த நபருக்குத் தீங்கையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ வரவழைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பில்லி சூனியம் தொடர்பான சடங்காகக் கருதப்படுகிறது. சட்டீஸ்கரில் சூனியம் தடுப்புச் சட்டம் (2005) அமலில் உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
‘அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய முட்டாள்தனமான பேச்சுக்கள் பில்லி சூனியம் தொடர்பான வன்முறைகளை ஊக்குவிக்கும் எனக் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


