துபாயில் குடியேறிவிட்டேன் எல்லோரிடம் இருந்தும் விலகியிருப்பது ஏன்..? நடிகர் அஜித் குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: துபாயில் குடியேறியுள்ள முன்னணி நடிகர் அஜித் குமார், எல்லோரிடம் இருந்தும் விலகியிருப்பது ஏன் என்பது உள்பட பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பரபரப்பாக பேசியுள்ளார்.
தமிழில் திரைக்கு வந்த ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்த பின்பு, வெளிநாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ள அஜித் குமார், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வருமாறு:
நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தேன். எனக்கு மூத்த சகோதரர் இருந்தார். என் சிறுவயதிலேயே வீட்டில் சமைக்க கற்றுக்கொடுத்தனர். அந்த வயதிலேயே நான் கிச்சனில் பணியாற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. எல்லோரும் இதை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வரும்போது, உங்களுக்கு நிறைய கடமைகளும், ஒப்பந்தங்களும் இருக்கும். அதை நிறைவேற்ற உங்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். அது நேரத்தை மிச்சப்படுத்தும். உங்களுக்கு தினசரி உதவி செய்ய ஒரு குழு இருப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், நான் அதை செய்யாமல் இருப்பதற்கு காரணம், சில நேரங்களில் அது உங்களை பாழாக்கிவிடும்.
ஆரம்பத்தில் உங்கள் கைப்பையை தூக்கவும், மற்றவற்றுக்கும் ஓடிவந்து உதவி செய்வார்கள். காலப்போக்கில் உங்களை சுற்றியிருக்கும் அனைவரிடத்திலும் அதை எதிர்பார்க்க தொடங்கிவிடுவீர்கள். நானும் அப்படி இருந்திருக்கிறேன். இப்போது அதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். அதனால்தான் இப்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி துபாயில் இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் மோட்டார் ஸ்போர்ட்ஸ். இங்கு நிறைய சர்க்கியூட்டுகள் இருக்கின்றன. ஒருவகையில் அவை எனக்கு பெரிதும் உதவுகின்றன.
இங்கு எல்லா விஷயங்களையும் நானே செய்வதை மிகவும் ரசிக்கிறேன். சிறுவயதில் கற்றுக்கொண்ட விஷயங்கள் தற்போது எனக்கு உதவுகின்றன. மற்றவர்கள் உதவி செய்ய காத்திருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். ஆனால், அது உங்களை பெரிதும் பாழாக்கிவிடும். 20 வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்து இருந்தால், கண்டிப்பாக நீங்கள் என்னை வெறுத்து ஒதுக்கி இருப்பீர்கள். நான் பாழாகி இருந்தேன் என்று சொல்லவில்லை. ஆனால், என்னிடம் ஒரு குழு இருந்தது. உங்களை சுற்றி அதிகமான நபர்கள் இருந்தால் வாழ்க்கை கடினமாகிவிடும். நான் நிறைய நேரத்தை அவர்களுக்கு இடையிலான தினசரி சண்டைகளை தீர்த்து வைப்பதிலும், அவர்களை நிர்வகிப்பதிலும் வீணடித்தேன். எனவே, முடிந்தவரைக்கும் சுயமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். சில நேரங்களில் உதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், பல நேரங்களில் நீங்களே சமாளித்துக்கொள்ளலாம். இப்போது நான் எனது முடிவுகளால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லோரிடம் இருந்தும் விலகி இருக்கிறேன். இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.
