Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன்னை விட எனக்கு தான் அதிக நஷ்டம்; விவசாயியை கடிந்து கொண்ட கார்கே: கர்நாடகா அரசியலில் பரபரப்பு

பெங்களூரு: விவசாயிகளின் துயரங்களைக் காது கொடுத்துக் கேட்காமல், அவர்களை அவமதிக்கும் வகையில் கார்கே பேசியதாக கூறி மதசார்பற்ற ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பெருநகர ஆளுமை ஆணையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராம்நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் மிரட்டும் தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘கோஷம் போடுவதைத் தவிர உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது’ என அவர் பேசியது, விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கலபுரகியில் உள்ள தனது இல்லத்திற்கு பயிர்ச் சேதம் குறித்து முறையிட வந்த விவசாயி ஒருவரை, மல்லிகார்ஜுன கார்கே கடிந்து கொண்டார். அந்த விவசாயியின் குறைகளைக் கேட்க மறுத்த அவர், ‘உனக்கு எத்தனை ஏக்கரில் பயிர் சேதம் ஏற்பட்டது? நான்கு ஏக்கரா? நான் 40 ஏக்கரில் பயிரிட்டேன். உன்னை விட எனக்குத்தான் அதிக நஷ்டம். மூன்று பிள்ளைகளைப் பெற்றவர், ஆறு பிள்ளைகளைப் பெற்றவரிடம் வந்து பிரசவ வேதனை குறித்துப் பேசுவதைப் போல் உள்ளது உன்னுடைய பேச்சு. விளம்பரத்திற்காக இங்கு வராதே; பயிர்ச் சேதம் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இந்தச் சம்பவத்திற்கு மதசார்பற்ற ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் கட்சிக்கு விவசாயிகள் என்பவர்கள் வெறும் தேர்தல் அறிக்கைக்கும், மேடைப் பேச்சுக்குமானவர்கள் மட்டுமே. இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தும், உங்களுடைய (கார்கே) சொந்த மாவட்ட விவசாயியின் குறைகளைக் கேட்கக்கூட உங்களுக்குப் பொறுமை இல்லையா?’ என அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.