சென்னை: கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் நிறுவன தொழிலாளர்களுக்கு ரூ.31,000 ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஹூண்டார் மோட்டார் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதைத் தொடர்ந்து, நீண்ட காலமாக ஊழியர்களுடன் நிலவி வந்த ஊதிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) மற்றும் யுனைடெட் யூனியன் ஆஃப் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ் (UUHE) எனப்படும் தொழிலாளர்கள் அமைப்புக்கும் இடையே 2024-2027 ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், வாகனத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஊதிய ஒப்பந்தமானது ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2027 வரை அமலில் இருக்கும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகள் 1.95% உயர்ந்து, ஒரு பங்கு ரூ.2,653 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இத்தகைய ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள ஹூண்டாய் நிறுவன தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.31,000 உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாகம், ஐக்கிய ஹூண்டாய் ஊழியர் சங்கம் இடையே ஒப்பந்தமிடப்பட்டது. ஊதிய உயர்வு தொகை ரூ.31,000மும், 3 ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் ஆண்டில் 55%, 2வது ஆண்டில் 25%, 3வது ஆண்டில் 20% ஊதியம் உயர்த்தப்படும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மருத்துவ வசதி உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.