20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற வேண்டும்: மக்கள் நல அமைப்புகள் கோரிக்கை
சென்னை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பெற வேண்டும் என மக்கள் நல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பெற வேண்டும் என மக்கள் நல அமைப்புகள் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் தமிழர் அதிகாரம் தலைவர் அழகர்சாமி பாண்டியன், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் காளியம்மாள், தமிழக மக்கள் புரட்சி கழக தலைவர் குணசேகரன், வன வேங்கைகள் கட்சி தலைவர் ரணியன், பா.ம.க. கொள்கை விளக்க அணி மாநில தலைவர் வியனரசு ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனிச்சியம், பேய்க்குளம், கீழச்செல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடையநேரி, கிழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடியேந்தல், கடம்போடை, நல்லிருக்கை, அரியகுடி, இரா.காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், அலமனேந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி ஆகிய இடங்களில் 20 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளை தோண்டுவதற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு (O.N.G.C) மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (S.E.I.A.A) அனுமதியளித்துள்ளது. கடல்சார் தொழிலையும் பெரிதும் நம்பியிருக்கும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டங்களின் மக்கள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
