Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்தநிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதற்கட்டமாக 3 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை 20 கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டன.

குறிப்பாக, தனிச்சியம், பேய்குளம், கீழ் செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் சோதனை நடத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டத்தை தெரிவித்திருந்தனர். மேலும் இத்திட்டத்திற்கான அனுமதியினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. அந்தவகையில் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியினை அரசு வழங்காது என நிதி மற்றும் காலநிலைமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, கடந்த 2020ம் ஆண்டு பிப்.20ம் தேதி தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை , பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது. இச்சட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி, மற்றம் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2023ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையில் ஓ.என்.ஜி.சி நிறுவனமானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்ததை தொடர்ந்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓ.என்.ஜி.சி-க்கு சுற்றுச்சூழல் அனுமதியினை நேரடியாக வழங்கியுள்ள செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை அடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும். எனவே, தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன் .

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.