நியூயார்க்: அமெரிக்காவில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த மாணவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பழைய மலாக்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது சயீத் (20). இவர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த 7ஆம் தேதி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக தனது தங்குமிடத்தில் இருந்து வெளியே சென்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர், ஹார்ட்ஃபோர்டில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சயீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரால் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளதால், சயீத்தின் உடலை அடக்கம் செய்வதற்காக ஐதராபாத்திற்கு கொண்டு வர இந்திய அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர்.