முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை : முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், மருத்துவருமான எச்.வி.ஹண்டேவிற்கு தற்போது 99 வயதாகிறது. இவரது மருத்துவமனை கீழ்ப்பாக்கம் பகுதியிலும், இல்லம் ஷெனாய் நகரிலும் உள்ளது. இவர் ஒன்றிய பாஜ அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பாராட்டுவதும், விமர்சிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எச்.வி.ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினத்தன்று, இந்தியாவில் போலியோ ஒழிப்புக்காக எச்.வி.ஹண்டே ஆற்றிய பணிக்காக அவருக்கு, தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹண்டேவை அவரது மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்டி முதலமைச்சருக்கு எச்.வி.ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.
எச்.வி.ஹண்டேவை சந்தித்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில், ‘‘நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த தமது பார்வைகளை முன்வைத்தும் - தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு பொழிந்தும் முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை. 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன்’’ என கூறியுள்ளார்.