கணவர் குடும்பத்தினரை பழிவாங்க பயன்படுத்தப்படும் 498ஏ சட்டப்பிரிவு வேதனை அளிக்கிறது: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தின் 498ஏ பிரிவு, திருமணமான ஒரு பெண்ணை அவரது கணவரோ அல்லது கணவனின் உறவினர்களோ கொடுமைப்படுத்துவதைத் தடுக்கும் ஒரு சட்டப் பிரிவு ஆகும். இதில் வரதட்சணை கோரிக்கைகளும் அடங்கும். இந்த பிரிவின் கீழ், அத்தகைய கொடுமைக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இந்த நிலையில், திருமணமான ஒன்றரை மாதத்தில் ஒரு பெண் தனது கணவர் மீது 498ஏ பிரிவின் கீழ் புகார் அளித்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தவறான புகார்கள் காரணமாக, இப்போதெல்லாம் மாமியாரும் கணவரும் மனைவி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. நாங்கள் இதுபோன்ற பல புகார்களை ரத்து செய்துள்ளோம். எல்லா வழக்குகளும் பொய்யானவை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் 498ஏ மிகவும் கொடூரமானது மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டப்பிரிவு, குடும்ப உறவில் எலுமிச்சையைப் பிழிவதைப் போன்றது.
குறிப்பாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கில், தெளிவற்ற மற்றும் பொதுவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சட்டம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் பல வழக்குகளில், தொலைதூர உறவினர்கள் மற்றும் வயதான பெற்றோரைக் கூட வழக்கில் சிக்க வைக்கும் போக்கைக் கண்டித்துள்ள நீதிமன்றம், சில நேரங்களில் பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான பிரிவுகளுடன் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவது என்பது வேதனை அளிக்கிறது.
கடந்த மே மாதம், இந்தப் பிரிவை புதிய சட்டமான பி.என்.எஸ் சட்டப் பிரிவில் சேர்ப்பதற்கு முன்பு மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு மேல் இந்த விவகாரத்தில் நாங்கள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இருப்பினும், இந்தப் பிரிவின் தவறான பயன்பாட்டிற்காக அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்க முடியாது. உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாக மத்தியஸ்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.