Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார் மீது பைக் உரசல்: 2 கிமீ துரத்தி சென்று ஓட்டுனரை கொன்ற கணவன்-மனைவி கைது

பெங்களூரு: பெங்களூரு, ஜே.பி.நகர் 7வது கிராஸ் ஸ்ரீராம் லே-அவுட் பகுதியில், கடந்த 25ம் தேதி இரவு, பைக் மீது கார் மோதியது. இதில் கோனனகுண்டேயை சேர்ந்த உணவு விற்பனை பிரதிநிதி தர்ஷன் (24) என்பவர் இறந்தார். அவரது நண்பர் வருண் (24) படுகாயமடைந்தார். தகவலறிந்து ஜே.பி.நகர் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பைக் மீது வேண்டும் என்றே கார் மோதி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. வாகன பதிவு நம்பரை வைத்து ஜிம் பயிற்சியாளர் மனோஜ்குமார் (34), அவரது மனைவி ஆர்த்தி சர்மா (30) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இதுபற்றி தெற்கு போலீஸ் துணை கமிஷனர் லோகேஷ் நேற்று அளித்த பேட்டி: கேரளாவை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் மனோஜ்குமார், தன் மனைவி ஆர்த்தி சர்மாவுடன், பெங்களூரில் வசித்து வருகிறார்.

இருவரும் கடந்த 25ம் தேதி இரவு வெளியே சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மனோஜ்குமார் கார் கண்ணாடி மீது, தர்ஷன் ஓட்டி சென்ற பைக் உரசியது. இதில் கண்ணாடி உடைந்தது. பைக்கை நிறுத்தாமல் தர்ஷன், அவரது நண்பர் வருண் சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியர் காரில் விரட்டினர். 2 கி.மீ., விரட்டிச் சென்ற நிலையில், ஒரு இடத்தில் பைக் மீது காரால் மோதிவிட்டு நிற்காமல் சென்றனர். தூக்கி வீசப்பட்ட தர்ஷன், சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த தம்பதி, தங்கள் காரின் உடைந்த கண்ணாடியை அங்கிருந்து எடுத்து சென்று ஆதாரங்களை அழிக்க முயன்றனர். தம்பதி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.