சூலூர்: திருமணமான 4வது நாளில் அக்கா கணவருடன் புதுப்பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே நீலாம்பூர் பகுதியில் வசிப்பவர் சூரியகுமார்(40). 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று, தற்போது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சூரியகுமாரின் மனைவி 32 வயதான தனது தங்கைக்கு கடந்த 2 மாதங்களாக மாப்பிள்ளை பார்த்து கடந்த 4 நாட்களுக்கு முன் நீலாம்பூரில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் செய்த 4வது நாளே புதுப்பெண் மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் சூலூர் போலீசில் புகார் அளித்தார். அதே வேளையில் புதுமண பெண்ணின் அக்காள் கணவரான சூரியகுமாரும் காணாமல் போயிருந்தார். இருவரின் செல்போன் எண்களின் டவர்களை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் இருவரும் ஒன்றாக இருப்பதை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த புதுமணப்பெண், ‘திருமணத்திற்கு முன்பிருந்தே அக்காள் கணவருடன் தொடர்பில் இருந்தேன்.
வெளியே சொன்னால் வீட்டில் அடித்து கொன்று விடுவார்கள் என நினைத்து பயந்து சொல்லாமல் இருந்து விட்டேன். திருமணம் ஆன பின்பு எனக்கு கணவன் மீது ஆசை இல்லாமல் போனதால், மீண்டும் அக்காள் கணவரிடம் இது குறித்து தெரிவித்தேன். அவரது ஆலோசனையின் பேரில் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டோம்’ என தெரிவித்துள்ளார்.
புதுப்பெண் கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என தெரிவிக்கவே இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், காணாமல் போன மணப்பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைத்ததாக கூறி அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கைகள் ஏதும் தேவை என்றால் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
