Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரீல்ஸ் வீடியோ, கள்ளத் தொடர்பு சந்தேகத்தால் மனைவியை 17 துண்டாக வெட்டிக் கொன்ற கணவன்: கழிவுநீர் கால்வாயில் துண்டித்த தலை மீட்பு

தானே: மகாராஷ்டிராவில் ரீல்ஸ் வீடியோ, கள்ளத் தொடர்பு சந்தேகத்தால் மனைவியைக் கொன்று 17 துண்டுகளாக வெட்டிய கணவனை ஐந்து நாட்கள் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், பிவண்டியில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கழிவுநீர் கால்வாயில் இருந்து பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று மீட்கப்பட்டது. கொலை நடந்த இடம், பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் என எந்தத் தடயமும் இல்லாததால், கொலையாளியைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. இது தொடர்பாக போயிவாடா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலையை அடையாளத்திற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஹனிஃபா கான் என்ற பெண், தனது மகள் முஸ்கானைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். மகளின் செல்போன் இரண்டு நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மருமகன் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். காவல்துறையினர் கால்வாயில் கிடைத்த தலையின் புகைப்படத்தைக் காட்டியபோது, அது தனது மகள் முஸ்கான்தான் எனத் தாய் அடையாளம் காட்டினார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் முஸ்கானின் கணவர் முகமது தாஹா அன்சாரியை (27) பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, மனைவியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மனைவியின் உடலை 17 துண்டுகளாக வெட்டி, பிவண்டியின் வெவ்வேறு பகுதிகளில் வீசியதாகவும் அவர் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தற்போது, பெண்ணின் மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கொலையான முஸ்கான், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு வந்துள்ளார். மேலும் முஸ்கான் சில ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆகஸ்ட் 29ம் தேதி மனைவியைக் கொலை செய்து, அவரது தலையைத் துண்டித்துள்ளார். பின்னர், தலையையும், உடலையும் தனித்தனியாகக் கால்வாயில் வீசியுள்ளார்.

நீண்ட விசாரணைக்கு பின்னர் முகமது தாஹா அன்சாரியை கைது செய்துள்ளோம். தற்போது படகுகள் உதவியுடன் முஸ்கானின் உடலைத் தேடும் பணி நடக்கிறது’ என்று கூறினர். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது லிவ் இன் காதலனால் பெண் ஒருவர் கொடூரமாக வெடிக் கொல்லப்பட்ட சம்பவம் போன்று மும்பையிலும் தற்போது நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.