திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (43). மகள்கள் தமிழ்செல்வி (25), சாரதா (20). மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பழனிவேல் கண்டித்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் பழனிவேலு கடந்த மாதம் 8ம்தேதியில் இருந்து வீட்டுக்கு வரவில்லை. அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, கொழுப்பு கட்டிக்காக கோயமுத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பழனிவேலுவின் சகோதரி காவேரி, கடந்த 27ம்தேதி நமணசமுத்திரம் போலீசில் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதுதெரிந்து மாயமான மகாலட்சுமி, அவரது மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா ஆகியோரை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த மாதம் 8ம்தேதி மகாலட்சுமிக்கும், பழனிவேலுக்கும் இடையே நடத்தையில் சந்தேகத்தால் தகராறு ஏற்படவே அவர் கட்டையால் தாக்கியதில் பழனிவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மகள்கள் உதவியுடன் உடலை வீட்டு வாசலில் குழி தோண்டி புதைத்துள்ளார் என தெரிய வந்தது. பின்னர் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தாய், 2 மகள்களை கைது செய்தனர்.
 
  
  
  
   
