லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் வாட்ஸ்-அப் மூலம் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், பசேரா கிராமத்தைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கும் அஸ்மா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் அஸ்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரில்," எனக்கு திருமணம் ஆனது முதல் கணவர் வீட்டார், வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தனர். இதையடுத்து நான் என்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.கடந்த மார்ச் 31-ம் தேதி, என் கணவர் வாட்ஸ்-அப் மூலம் மூன்று முறை ‘தலாக்' என பதிவிட்டு என்னை விவாகரத்து செய்தார். இது சட்டவிரோதம் ஆகும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."என கூறியிருந்தார்.
அஸ்மா கொடுத்த புகாரின் பேரில், வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அஸ்மாவின் கணவர் ஹசன், அவரது தாய் ரஷிதா, 2 சகோதரர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.