Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பசியின்மை, தரமான கல்வி, பொருளாதார வளர்ச்சியில் சாதனை: கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் தமிழ்நாடு: புள்ளி விவரத்தில் தகவல்

நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கான ஆய்வில் தமிழ்நாடு 80.2 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது. கண்ணியமான வாழ்க்கை முறையின் கீழ், நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கில் இந்தியாவில் சிறப்பாக இயங்கும் போட்டியாளர்கள் முன்னணிப் பட்டியலில் ஒருவராக தமிழ்நாடு தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது மனித மேம்பாடு, சமூக நீதி மற்றும் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய அசைக்க முடியாத உறுதிப்பாட்டை தமிழ்நாடு நிலை நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடும் 80.2 புள்ளிகளை பெற்று அனைவரையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக சண்டிகர் (78.2), பஞ்சாப் (77.8), உத்தரகாண்ட் (77.2) ஆகியவற்றையும் சேர்த்து தமிழ்நாடு மற்ற 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைவிட முன்னேற்றியுள்ளது.

இந்த சாதனை மாநிலத்தின் முக்கிய நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கில் குறிப்பிட்ட நிலையை எட்டியுள்ளதை பிரதிபலிக்கிறது.அதாவது வறுமையின்மை (நீடித்த வளர்ச்சி நிலை 1), பசியின்மை (நீடித்த வளர்ச்சிநிலை 2),சிறப்பான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு(நீடித்த வளர்ச்சிநிலை 3)தரமான கல்வி (நீடித்த வளர்ச்சி நிலை 4) மற்றும் ஒழுக்கமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (நீடித்த வளர்ச்சிநிலை 8). ஆகியவற்றில் தமிழ்நாடு பிற மாநிலங்களை காட்டிலும் முன்னேறியுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் 51 சதவீதம் பேர் மேற்கண்ட சாதனை அளவுகளில் 65 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளனர். அதேநேரத்தில் இந்தியாவின் 2030ம் ஆண்டுக்கான நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கின் முன்னோக்கிய பாதையில் பிராந்திய ஏற்றதாழ்வு, செயல்திறன் ஆகியவற்றில் பீகார் (43.2) உத்திரபிரதேசம் (56.4), ஜார்க்கண்ட்(57.2) மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் தமிழக மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான முற்போக்கு நலக் கொள்கைகள் மற்றும் நிர்வாக மாதிரி போன்றவற்றுக்காக தமிழ்நாடு 80.2 மதிப்பெண் பெற்றுள்ளது.

வறுமை மற்றும் பசியைக் குறைப்பதில், நிலையான வளர்ச்சிக்கான இலக்கு 1 மற்றும் 2 ஆகியவை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மற்றும் லட்சக் கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது வினியோக அமைப்பு போன்ற பல்வேறு திட்டங்களால் இயக்கப்படுவதால் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம், கல்வியறிவும் அதிகரிப்பு: சுகாதாரப் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம், விரிவான ஊரக சுகாதார வசதிகள், ஆகியவை நிலையான வளர்ச்சி 3ஐ உயர்த்தியுள்ளது. அதன் காரணமாக குழந்தை இறப்பு சதவீதம் தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சி 4ல் கல்வியை கொண்டு வந்து, தமிழ்நாட்டில் கல்வியறிவு சதவீதம் 80.3 சதவீதமாக உயரக் காரணமாக இருக்கிறது. பள்ளிகளுக்கு பரவலான அணுகல் மற்றும் தொழில் பயிற்சி ஆகியவை பணித் திறன்களை வலுப்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு இந்தியாவில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது.

தொழில் மையங்களாக மாறிய சென்னை, கோவை நகரங்கள்: நிலையான வளர்ச்சி 8ன்படி, வெளிநாட்டு நேரடி முதலீடு, வேலைகளை உருவாக்குவது, சமூக இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் வருமான சமத்துவமின்மையைக் குறைத்தல் ஆகிய செயல்திட்டங்கள் மூலம் சென்னை, கோவை நகரங்கள் தொழில் மையங்களாக மாறியுள்ளன. தமிழ்நாட்டின் புள்ளிவிவர அறிக்கையின் படி, இந்திய மக்களில் 51% பேர் வறுமை, பட்டினி, சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தங்களுக்கான கண்ணியமான 65% வாழ்க்கை இலக்கை அடைய முடியாமல் போராடுகின்றனர்.

நிலையான வளர்ச்சி இலக்கில் பீகார் மாநிலம் 43.2 புள்ளிகளையும், உத்தர பிரதேசம் 56.4 புள்ளிகளையும் பெற்று ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளன. தேசிய மாதிரி சர்வே அலுவலக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பீகாரில் வறுமை ஒழிப்பில் தொடரும் சவால்களின் மூலம் 33 % மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் என்று தெரியவருகிறது. அதனால்தான் பீகார் மாநிலம் குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளதை காட்டுகிறது. ஜார்கண்ட் மாநிலம் விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவற்றை நம்பியுள்ளதால் போதிய பல்வகைப் படுத்துதல் இன்மையால், அவை பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.

அதே நேரத்தில் அஸ்ஸாமின் வெள்ளப் பெருக்கு, நிலப்பரப்பு மற்றும் இனமோதல்கள் அங்கு சமூக வளர்ச்சியை தடுக்கின்றன. இரு மாநிலங்களும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்னை ஆகியவற்றுடன் போராடுகின்றன. இந்த பிரச்னைகள் ஜார்கண்டில் 39.6% குழந்தைகளிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இது குறைந்த சதவீதம் தான்.

சாதனைக்கு உதவிய முன்மாதிரி திட்டங்கள்: பின்தங்கிய மாநிலங்களை பொறுத்தவரையில் அவர்களின் வளர்ச்சிப் பாதையில் தனித்துவ சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டின் முன்மாதிரியான செயல் திட்டங்களில் இருந்து பின்தங்கிய மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கது.

நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாட்டின் தலைமைப்பண்பு, செயல்பாடு மூலம் கேரளாவுக்கு இணையாக 80.2 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை கட்டமைப்பதில் ஒரு முன்மாதிரி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.

* நிலையான வளர்ச்சிக்கான 5 இலக்குகளில் தமிழ்நாடு

மாநிலம் உயர் சராசரிப் புள்ளிகளை பெற்றுள்ளது. குறிப்பாக வறுமையின்மை, பசியின்மை, நல்ல உடல் நலம் உள்ளிட்ட 5 வளர்ச்சி இலக்குகளில் தமிழ்நாடு 80.2 புள்ளிகளை பெற்றுள்ளது

* ஊட்டச்சத்து, மருத்துவ வசதி; பீகாரின் நிலை பரிதாபம்

தேசிய சராசரியோடு ஒப்பிடும் போது பீகாரில் 5 குழந்தைகள் ஊட்டச்சத்துகுறைபாடு உள்ளதாகவும் தெரியவருகிறது. இது அங்கு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. மருத்துவமனைகளை பொருத்தவரையில் 1000 பேருக்கு 0.5 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. அதேபோல கல்வியில் பீகாரில் 63.8 சதவீதம் பள்ளி இடைநிற்றல் இருக்கிறது. உத்திரபிரதேசத்தில் வரையறுக்கப்பட்ட தொழில்மயம், அதிக வேலைவாய்ப்பின்மை, ஊரக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, போன்ற போராட்டங்களை சந்தித்து வருகிறது.

அத்துடன் வறுமையின் அளவு 29 சதவீதமாக இருக்கிறது. மேலும், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அடைவதில் குறிப்பிட்ட இடைவெளி, அனைவருக்குமான கல்வி, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஆகியவற்றில் அந்த மாநிலம் பங்காற்றியதில் 56.4 புள்ளிகளை பெற்றுள்ளது. குறைந்த செயல்பாடுகளின் மூலம் ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மாநிலங்கள் தலா 57.2 புள்ளிகளை பெற்றுள்ளன. மேலும், மலை வாழ் மக்களின் வறுமை அதிகரித்தல், புவிரீதியாக ஒதுக்கப்படுதல், போதுமான அடிப்படை வசதிகள் இன்மை ஆகியவற்றிலும் இந்த மாநிலங்கள் போராடுகின்றன.