Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்திலிடம் நலம் விசாரித்த தலைவர்கள்!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கல்வி நிதி விடுவிக்க கோரி திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ஒன்றிய அரசு, ‘சமக்ர சிக் ஷா அபியான்’ (எஸ்.எஸ்.ஏ.) என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கடந்த 29ம் தேதி காலை திருவள்ளூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

2ம் நாள் போராட்டத்தின் போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் போது மருத்துவமனையில் இருந்து உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்தார். இந்த நிலையில் 3வது நாளாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார். ஆகவே, சசிகாந்த் செந்திலின் உடல் நலம் மேலும் பாதிக்கப்படும் என்பதால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சசிகாந்த் செந்திலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் சசிகாந்த் செந்திலை, ராகுல் காந்தி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பாஜக அரசுக்கு எதிராக இன்னும் பல போராட்டங்கள் நடத்த வேண்டி இருப்பதால் உடல்நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுரையை ஏற்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தினார். இதையடுத்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, கே.எஸ்.அழகிரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் சசிகாந்த் செந்திலை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளனர்.