நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம் மனித எலும்புகள் கிடைத்த இடத்தில் மீண்டும் எஸ்ஐடி சோதனை: தர்மஸ்தலாவில் பதற்றம்; போலீஸ் குவிப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக கோயிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. புகார்தாரரிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரை சம்பந்தப்பட்ட நேத்ராவதி ஆறு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார்தாரர் காட்டிய 13 இடங்கள் குறிக்கப்பட்டன. பின்னர் அந்த இடங்கள் ஒவ்வொன்றாக தோண்டப்பட்டு வருகின்றன.
கடந்த சனிக்கிழமை வரை 10 இடங்கள் தோண்டப்பட்ட நிலையில், அந்த 10 இடங்களில், ஒரேயொரு உடலின் 12 எலும்புகளும், ஒரு மண்டையோடும் மட்டுமே கிடைத்தன. ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் தோண்டும் பணி நடைபெறவில்லை. திங்கட்கிழமையன்று, 11 மற்றும் 12வது இடங்களைத் தோண்ட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெல்தங்கடி தாலுகா பங்காளகுட்டே என்ற மலைப்பகுதியில் 11வது இடத்திற்கு அருகே புதிதாக ஒரு இடத்தை புகார்தாரர் அடையாளம் காட்ட, அந்த இடத்தை 14 என குறித்து, அங்கு தோண்டப்பட்டதில் சில எலும்புகளும், ஒரு சேலையும், ஆண் காலணி ஒரு ஜோடியும் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
11வது இடத்திற்கு அருகேயே மற்றொரு இடத்தையும் புகார்தாரர் அடையாளம் காட்டியதால் 11ஏ என குறிக்கப்பட்ட அந்த இடத்தில் நேற்று சிறிது நேரம் மட்டுமே தோண்டும் பணி நடந்தது. 14வது இடத்தை மேலும் தோண்டி ஆய்வு செய்வதுடன், அதைச்சுற்றிய சில இடங்களில் நேற்று தோண்டும் பணிகளை மேற்கொள்ள எஸ்.ஐ.டி திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு நேற்று பார்வையிட்ட அதிகாரிகள் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல் சென்றனர். 11ஏ பகுதியிலும் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, தர்மஸ்தலா கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பணியாற்றிய பி.டி.ஓ-க்கள், வி.ஏ.ஓ-க்கள் மற்றும் மற்ற சில அதிகாரிகள் குறித்த விவரங்கள், ஆவணங்களை எஸ்.ஐ.டி பெற்றுள்ளது. தர்மஸ்தலாவில் 1995 முதல் 2014 வரை பணியாற்றிய அனைத்து அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள எஸ்.ஐ.டி, அதுதொடர்பான அனைத்து தகவல்கள், ஆவணங்களையும் பெற்றிருக்கிறது. உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
* யூடியூபர்கள் மீது தாக்குதல்
தர்மஸ்தலா அருகே பங்களாகுட்டே காட்டுப்பகுதியில் எஸ்.ஐ.டி தோண்டும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்திருந்த 3 யூடியூபர்களை உள்ளூர் இளைஞர்கள் சிலர் தாக்கினர். தர்மஸ்தலா கோவிலைப் பற்றி தவறாக சித்தரிப்பதாகவும், கோவிலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் வீடியோ வெளியிடுவதாகக் கூறி யூடியூபர்களை இளைஞர்கள் சிலர் தாக்கினர். யூடியூபர்கள் தாக்கப்பட்டதற்கு அதே ஊரைச் சேர்ந்த மற்ற இளைஞர்கள் சிலர் கண்டனம் தெரிவித்ததுடன், யூடியூபர்களுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். யூடியூபர்களைத் தாக்கி கேமராக்களை சேதப்படுத்திய இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது போலீஸ் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகமானது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.