Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசனிச்சிட்டுகள் (Hummingbird)

சிறகடித்துக்கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை ஓசனிச்சிட்டுகள் (Hummingbird) என்னும் மிகச் சிறிய பறவைகள். இவ்வினப் பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பறவை இனத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு (சுரும்புச்சிட்டு) வகைகள் உள்ளன.கியூபாவில் வாழும் இப்பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது. எடையும் 1.8 கிராம் மட்டுமே. ஓசனிச்சிட்டுகளின் அறிவியல் பெயர் டிரோச்சிலிடீ (Trochilidae) ஆகும். டிரோச்சிலசு (trochilus) என்னும் கிரேக்க மொழிச்சொல் விரைந்தோடு என்னும் பொருள் கொண்டது. இதிலிருந்து இச்சொல் உருவானது. தமிழில் ஓசனிச்சிட்டை முரல்சிட்டு, ஞிமிர்சிட்டு, சுரும்புச்சிட்டு மற்றும் ரீங்காரச் சிட்டு என்றும் அழைக்கிறார்கள். இப்பறவையின் இதயம் நிமிடத்திற்கு 1260 முறை துடிக்கிறது.

இப்பறவைகளின் சிறப்பியல்புகளில் ஒன்று, இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 முறை மிகமிக வேகமாக அடிப்பதால் ‘‘உசுஉசு” என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும்போது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது. நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரக்கூடியது. இந்தப் பறவைகளின் தனித்துவமான இறக்கை வடிவமைப்பு, அவை ஒரே இடத்தில் இறக்கையடித்துக் கொண்டே இருப்பதற்கு உதவி செய்கிறது. அதிக வேகத்தில் இறக்கை அடிக்க வேண்டும் என்றால், அதற்கு வலுவான தசைகளும் எலும்புகளும் தேவைப்படுகின்றன. அதேபோன்று ஓசனிச்சிட்டுகளின் எலும்பு அமைப்பு, அவற்றின் இறக்கைகளைச் சுழற்ற அனுமதிக்கிறது. இறக்கையை மாற்றி அமைப்பதன் மூலம் மேல் நோக்கு விசையையும் முன்னோக்கு விசையையும் பின்னோக்கு விசையையும் உருவாக்குவதற்கு இதனால் முடிகிறது. அதனால் எல்லாத் திசைகளிலும் பறக்க முடிகிறது. இதுபோன்ற அமைப்புகள் மற்ற பறவைகளுக்கு இல்லாததால், அவற்றால் பறக்கும்போது அந்தரத்தில் நிற்கவோ அல்லது பின்னோக்கிச் செல்லவோ முடிவதில்லை. இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச்சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.