மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதம்: பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிட்ட அறிக்கை: கடந்த 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் மனிதநேய ஜனநாயக கட்சியையும் இணைத்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மனிதநேய ஜனநாயக கட்சி நேரடியாக போட்டியிடவில்லை. மாறாக, அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் மஜக போட்டியிட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் மனிதநேய ஜனநாயக கட்சி ஈடுபட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நிர்வாக கட்டமைப்போடும் மக்கள் செல்வாக்கோடும் இயங்கி வரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் செயல் கண்டனத்திற்குரியது. தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரே காரணத்தைக் கொண்டு கட்சியின் பதிவை ரத்து அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை சட்டரீதியாக எதிர்கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவை உறுதி செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.